Sunday 7 October 2012

சந்நிதிக் கந்தர் சதகம்

விநாயகர் வணக்கம்

சந்நிதிக் கந்தர் சதகத் தமிழ்செய்ய
மன்னு கருணை மழைபொழியும் - தன்னருமோர் 
கோட்டிற் கயமுகனைக் கொன்றுலகு காத்தவெழின்
மோட்டகட்டு வேத முதல்.

நூல்

மலையான் மகளார் மகனே மயிலா
அலைசேர் தருசந் நிதிவாழ் அழகா
நிலையா வுலகை நிலையென் றுணர்வேன்
அலையா வகைகாத் தருள்வோய் அரைசே.1

அரைசாய் அமரர்க் கமர்வோன் மகளைத்
தரையார் தருமத் தகைநன் றுணர்வான்
வரைவாய் குறவர் மகளைக் களவில்
விரைவாய் கவர்வாய் மறவா தருளே.2

அருளென் றுலகத் தவர்வந் தடியைப்
பரவும் படிசந் நிதியிற் பரவைக்
கருகிற் குடிகொள் அயில்வேல் அமரா
பெருகும் துயர் மெய்ப் பிணிபோக் குவையே.3

குவையார் பொருளே குறியாக் குறியா
நவைவாய் விழுமா றறியா நலமார்
அவையார் பயில்சந் நிதிசேர் அமலா
சிவைசேய் தருவாய் திருவிற் றிருவே.4

திருமால் மருகா திகழ்சந் நிதியில்
முருகா பவநோய் முடுகா வகைகாத்
தருளாய் சிவன்மா ணவனா யமரக்
குருவாய் அருள்வாய் குடிலைப் பொருளே.5

பொருளைப் புவியைப் புகழைக் கருதா
தருளைக் கருதித் துதிநின் அடியார்
இருளைக் களைதற் கெழுமுட் சுடரே
பொருளுட் பொருளாப் பொலிவெற் பிறையே.6

இறையே யெனினும் பசிவந் தியையா
நிறைவாழ் வளிசந் நிதியில் நிமலா
குறையா னவையுங் குணமென் றுகொளுன்
அறைநூ புரமெல் லடியெம் புகலே.7

புகலற் கமையாப் பொருணீ யெனினும்
அகநெக் குருகித் தொழுவார் அழுவார்
சுகமுற் றிடவுட் சுடர்வாய் அலையோ
பகவெற் பெறிவேல் பரிகைப் பரனே.8

பரனென் றயனோ டரியும் பரவும்
சரணன் சிவசங் கரியின் தநயன்
கரமைந் தமையெங் கரிபின் னவனல்
வரசந் நிதியில் வதிசண் முகனே.9

முகனா றுடையான் முழையிற் கீரன்
தகவார் தமிழிற் றனதா ளேத்த
மிகவா தரவாய் வெளிவந் தாண்ட
குகனைப் பரவக் கொடுநோய் போமே.10