Saturday 13 October 2012

கல்வியும் ஒழுக்கமும்

மக்கள் வடிவு கொண்டவர்கள் யாவரும் மக்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படார். அவர்களுட் கல்வியுடையோரே மக்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். விலங்குப் பிறவியிலும் மக்கட்பிறவி  சிறந்ததென்பது யாவரும் அறிந்தது. அதுபோல கல்லாரினும் கற்றவர் சிறந்தவர் ஆவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

என்கிறது திருக்குறள்.

மக்களாற் பெறத்தக்கன நான்கு; அவை அறம் ,பொருள்,இன்பம்,வீடு என்பன.
அந் நான்கினையும் தருவது கல்வி.

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்று
உற்றுழியுங் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கிலைச்
சிற்றுயிர்க்  குற்ற துணை.

என்பர் குமரகுருபர சுவாமிகள்.

சிலவாகிய வாழ்நாளும் சிறிய அறிவும் பல்பிணியும் உடைய மக்களுக்குக்
கல்விபோற் சிறந்த துணை பிறதில்லை.

"கல்விக்குப் பயன் அறிவும் அறிவுக்குப்பயன் ஒழுக்கமும்" என்பர் பரிமேலழகர்.
அவ்வொழுக்கம் வீடுபேற்றுக்கும் வழி செய்யும். இதனைப் பரிமேலழகர்  பின்வருமாறு விளக்குவர்:
 தத்தம் வருணத்துக்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களில் வழுவாதொழுக அறம்  வளரும்.
அறம் வளரப் பாவம் தேயும். பாவம் தேய அறியாமை நீங்கும்.அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும் அழிதல் முதலாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம். அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யாெனன்பதும் விடும்" எனச் சொல்கின்றது அவர் விளக்கம்.

நெல்லுகிறைத்தநீர் நெல்லுக்குமாத்திரமின்றித் தான் செல்லும் வாய்க்காற் புல்லுக்கும் உதவுமாறுபோலக் கல்வியும் அதன்பயனாகிய ஒழுக்கமும் வீடு பேற்றுக்கு மாத்திரமன்றி இம்மைப்பேறு  பலவற்றுக்கும் காரணமாய் நிற்கும். பொருளும் புகழும் பூசனையும் தரும். குலத்தை உயர்த்தல், அரச மதிப்பும் பதவியும் தருதல், துன்பத்தை நீக்கல் என்பன முதலாக அவற்றின் பயன் நூல்களில் ஆங்காங்கே சொல்லப்படும். இனி, கல்வி கருவியும் ஒழுக்கம் பயனும் ஆதலின் இவ்விரண்டினுள் கல்வியிலும் ஒழுக்கமே சிறந்ததென்பர். ஒழுக்கம் தராத கல்வியாற் பயன் இல்லை.

ஆர்கலி  உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.

என்னும் முதுமொழிக்காஞ்சி. கற்க எனக் கூறிய வள்ளுவனார் கற்றால் அதற்குத்தக நிற்க என வற்புறுத்துவர்.
" கற்பன கற்றுக் கற்றாங் கொழுகுக".

"மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொளுக்கங் குன்றக் கெடும்"

"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

என்பன முதலாகப் பலவிடங்களில் ஒழுக்கத்தின் இன்றியமையாமை பேசப்படும். நல்லொழுக்கம்,  இம்மை மறுமையின்பங்களையும் தீயொழுக்கம் துன்பங்களையும் தரும் என்பது தெய்வப்புலமைத் திருவள்ளுவர் முதலிய பெரியோர் கருத்தாதலின் நன்மை விரும்பும் மக்கள், நல்லொழுக்கம் உடையவராதல் உலகில் நிலைபெற வழி செய்வது அரசன்,உபாத்தியாயன்,தாய், தந்தை, தம்முன் ஆகிய ஐங்குரவர்க்கும் கடனாகும். அரசன் என்பது அரசாங்க அதிகாரிகளையும், உபாத்தியாயன் என்பது  வித்யாகுரு, தீட்சகுரு,ஞானகுரு என்பவர்களையும் தம்முன் என்பது வயதுமிக்க பெரியவர்களையும் உணர்த்தும். இவ்வைங் குரவர்களையும் தேவரை ஒப்பக்கொண்டு தொழுதெழ வேண்டுமென்பது முந்தையோர் கண்ட முறையாகும்.

என்றிங்கனம் கூறிவற்றால் பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றவற்குக் கல்வியே இன்றியமையாத

"