Saturday, 13 October 2012

வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்-1

செந்தமிழ் வழங்கும் நிலமாகிய யாழ்ப்பாணம், அத்தமிழின் தாயகமாகிய தென்னிந்தியாவோடு பண்டைக்காலத்திலிருந்தே தமிழ்,சமயம் முதலியவற்றில் தொடர்புடையதாக இருந்து வருகிறது.
யாழ்பாணத்திலிருந்து சைவத்தமிழ் அறிஞர்கள் தென்னிந்தியா சென்றும், தென்னிந்தியாவிலிருந்து அத்தகையோர் யாழ்பாணம் வந்தும் சைவப் பணியும் தமிழ்ப் பணியும் புரிந்து வருகின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கிய கூழங்கைத் தம்பிரான் என்னும் பேரறிஞரின் மாணவ பரம்பரையில் வந்தவர்களிற் பலர் தென்னிந்தியா சென்று சைவப்பணியும்,தமிழ்ப்பணியும்
செய்திருக்கின்றனர். அவர்களின் மாணவ பரம்பரைகள் தென்னிந்தியாவில் இன்றும் உள.

நல்லைநகர் ஆறுமுகநாவலர், வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலப்பிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை,சபாபதிநாவலர்,அம்பலவாண நாவலர், மகா வித்துவான் நா,கதிரவே ற்பிள்ளை ,உரைஆசிரியர் ம.க.வேற்பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், செந்திநா தையர் முதலாகப் பலர் தென்னிந்தியா சென்று பணிபுரிந்து புகழ் நிறுவினார்கள். சுன்னாகம் அ .குமாரசாமிப்புலவர் முதலாகப் பலர் யாழ்பாணத்திலிருந்து கொண்டே தமது வித்துவத் திறமையால் தமிழ்நாடெங்கும் புகழ் பரப்பினார்கள். அவர்கள் வரிசையிற் பிற்காலத்தில் வைத்து மதிக்கப்படுபவர் வித்துவசிரோன்மணி பிரமஸ்ரீ சி.கணேசையர் அவர்கள்.

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அர்ச்சக பரம்பரையில் வந்தவர் சின்னையா என்னும் அந்தணப் பெரியார். அவர் வினயகப்பெருமானிடத்து மிகுந்த பக்தி பூண்டவர்.தாம் பூசிக்கும் படிகலிங்கத்துகுப் பூசனை புரிந்தன்றி உணவு கொள்ளாத நியமம் பூண்டவர். அவ்விலிங்கத்தை நாள் தோறும் நூற்றெட்டுத்தரம் வீழ்ந்து வணங்கி எழும் வழக்கம் உள்ளவர்.இவ்வீடுபாட்டால் பொருட்செல்வப் பேறு குறைந்தவர். அவர் அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவரை விவாகஞ்செய்து  நால்வர் பெண்மக்களுக்குத் தந்தையாயினர். அதனாலேற்பட்ட வறுமையாலும் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையினாலும் அவருக்குண்டான கவலை அவரது கடவுள் பக்தியை மேலும் வளர்பதாயிற்று. ஆண்பிள்ளை வேண்டி விநாயகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்தனர். அதன் பயனாக ஆங்கில வருடம் 1878 இல் நிகழ்ந்த ஈசுர வருடம் பங்குனி மாதம் 15ம் நாள் செவ்வாய்கிழமை பிற்பகல் 1மணி 20நிமிசமளவில் பூராடம் 3ம் காலில் அவருக்கு ஓராண்மகவு பிறந்தது. விநாயகப்பெருமான் அருளாற் பிறந்தமையால் அம்மகவுக்குக் கணேசையர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மகவே பிற்காலத்தில் வித்துவசிரோமணி எனச் சிறப்பிக்கப்பட்ட பிரம்மஸ்ரீ கணேசையர்  ஆகும்.

அக்காலத்தில் சின்னையர் அவர்களின் தமயனாராகிய கதிர்காமையர் வடமொழி தென்மொழிகளிற் பாண்டித்தியம் பெற்றவராய் விநாயகர் ஆலய மருங்கில் பாடசாலை ஸ்தாபித்து அதில் கற்பித்து வந்தார்கள்.அப்பாடசாலையே இப்போது அரசினர் பாடசாலையாக விளங்குவது. ஐந்து வயதில் ஐயரவர்கள் அப்பாடசாலையில் வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றார்கள்.
எட்டாம் வகுப்பு முடிய அப்பாடசாலையில் கற்றார்கள்.அங்குநீதிநூல்கள்,அந்தாதிகள்,பிள்ளைத்தமிழ்கள்,
இலக்கணம்,நிகண்டு, புராண நூல்கள்,சரித்திரம்,சமயம்,கணிதம் என்பவற்றில் பயிற்சி பெற்றார்கள். அக்காலத்தில் எட்டாம் வகுப்புச் சித்தி எய்தினால் மாணவ ஆசிரியனாகப் பயிற்சி பெற்று ஆசிரியனாகக் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு  இருந்தது.வறுமை நிலையிலிருந்த பெற்றார்கள் ஐயர் அவர்கள் ஆசிரியனாகக் கடமை செய்தலை விரும்பி அதனை எதிர் நோக்கி இருந்தனர்.எட்டாம் வகுப்பைப் பரிசோதிக்க வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள் நல்லை. ஆறுமுகநாவலர் அவர்களின் மருகர்;நன்மாணாக்கர்;புரோணாதிசிகாசங்களுக்கு பொருள் சொல்வதில் தமிழ் நாட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். (தொடரும்)