Sunday 14 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையர் -பாகம் 2

அவர்கள் பரீட்சிக்கும் போது ஐயர் அவர்களிடம் 'திகழ்தசக்கரச் செம்முகம் ஐந்துளான் ' என்ற, கந்தபுராணக் காப்புச் செய்யுளின் பகுதிக்குப் பொருள் சொல்லுமாறு கேட்டனர். ஐயர் அவர்கள் தாம் முன்னே கற்றுக் கொண்டபடி,"விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களையும் செவ்விய ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபிரான்" எனலும்,வித்துவசிரோமணி இடைமறித்து உடைமைப் பொருளுக்கன்றி  உண்மைப் பொருளுக்கு ஐ உருபை விரிக்கக் கூடாது என்ற இலக்கான நுட்பத்தை  எடுத்துக் காட்டி "விளங்கா நின்ற பத்துத் திருக்கரங்களும்,செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபிரான்"என்று உரைத்தல் வேண்டும் என்றனர்.அவருடைய மதிநுட்பத்தைக் கண்ட ஐயருக்கு அவரிடம் பாடங்கேட்க வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று.அதனால் மாணவ ஆசிரியப் பயிற்சி  பெறவேண்டுமென்ற பெற்றாரின் ஆசையை அவரால் நிறைவேற்றமுடியாது போயிற்று.கல்வியின்மேல் மகன் கொண்ட ஆர்வத்தையறிந்த பெற்றோர் தம்ஆசையை விட்டு வித்துவசிரோமணியிடம் படித்தற்கேற்ற ஒழுங்குகளைச் செய்தனர்.
வண்ணார்பண்ணைச் சிவன் கோவிற் பிரகாரத்தில் வாசித்த தமது தமக்கையாரின் வீட்டில் தங்கி ஐயரவர்கள் அவ்வூரில் வித்துவசிரோமணியால் நட்டாத்தப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடத்திற் கல்வி கற்று வந்தனர்.ஐயரவர்களின் மதிநுட்பத்தையும் கல்வியின்மேலுள்ள ஆசையையும் கண்ட வித்துவசிரோன்மணிக்கு ஐயர் அவர்களின்மேல் அன்பு வளர்வதாயிற்று. உயர்ந்த இலக்கண இலக்கியங்களைத் திண்ணைப் பள்ளியில் கற்றதோடமையாது புராணோதிகாசங்களுக்குப் பொருளுரைத்தற் பொருட்டு வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் தாமும் சென்று, அவர் கூறும் அரிய பொருள்களையும், கவிநயங்களையும்  குறித்துக் கொள்ளுவார் ஐயர் அவர்கள். தந்தையாருக்கு ஆலயத்தில் உதவிசெய்தற் பொருட்டு, புன்னாலைக் கட்டுவனில் தாம் தங்கவேண்டிய காலங்களிற்கூட ஐயர் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்று திரும்புவதில் தமக்கேற்படும் கஸ்டத்தை நோக்கினாரல்லர்.வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் சென்று,கல்வியே கருத்தாகக் கற்றுவந்தார்கள்.வித்துவசிரோமணி சிவனடி எய்தியதும் ஐயர் அவர்கள் கல்விக்குக் களை கண்காணாது திகைத்தார்கள்.

தம் விருப்பினை நிறைவேற்ற வல்லவர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களே எனத் தேறி அவரிடம் கற்கத் தொடங்கினார்கள். புலவர் வடமொழி தென்மொழிகளில் நிரம்பிய பாண்டித்தியம் உள்ளவர்;இலக்கண ஆராய்ச்சி மிக்கவர்;சொற்பொருள் விளக்கம் மிக்கவர்;தருக்கம் வல்லவர்;பொய்ப்பொருளைக் களைந்து மெய்ப்பொருளை நாட்டும் திறனுள்ளவர்;அதனால்,கண்டனப்  புலியாக விளங்கியவர்.புலவரின் தொடர்பால் ஐயர் அவர்கட்கு வடமொழியறிவும் தருக்க அறிவும் மிகுவன ஆயின.ஆராய்ச்சித் திறன் உறுவத்தாயிற்று.புலவர் சிவனடிஎய்தும் வரை ஐயரவர்கள் அவரின் தொடர்பை விட்டாரால்லர். புலவரின் தூண்டுதலால் அவரின் உதவியுடன் ஐயரவர்கள் பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்யவும்.ஆராய்ச்சிகள் செய்யவும்,கண்ண்டனங்கள் வரையவும்,நூல்களுக்கு உரை செய்யவும் தொடங்கினார்கள்.

அதனால் ஐயரவர்களின் புலமை தமிழுலகிற்குப் புலனாகத் தொடங்கியது.புலவர் செய்த நன்றியை ஐயர் எக்காலத்தும் மறந்திலர். புலவர் வாழ்ந்த காலத்திலேயே ஐயரவர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இடைக்காலத்தில் மூன்றந்தர ஆசிரிய தராதரப் பத்திரமும் பெற்றிருந்தாராதலின் பாடசாலைகளில் தலைமைஆசிரியராகக் கடமையாற்றும் தகுதி அவர்களுக்கு இருந்தது.வண்ணார்பண்ணை,வயாவிளான்,தையிட்டி,
நயினாதீவு,
சுன்னாகம் பிராசீன பாடசாலை,வருத்தலை விளான் ஆகிய இடங்களில் படிப்பித்திருக்கிறார்கள்.அவர்களிடம் படித்து,வித்துவான்,பண்டிதர்,புலவர் என்ற பட்டங்களோடு விளங்குபவர் பலப்பலர்.உயர்ந்த இலக்கண இலக்கியங்களை நீண்டகாலமாகத் திரும்பத் திரும்பக் கற்பித்து வந்ததால் அவ்நூல்களில் நிரம்பிய ஆட்சிபெற்றிருந்ததே ஐயர் அவர்களின் ஆராய்சிச் சிறப்புக்குக் காரணமாயிற்று.