Thursday, 25 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 4

இங்ஙனம்  அறிஞர்களின் மதிப்பைப் பெற்ற ஐயரவர்கள்,ஆராய்சிகளும்,கண்டனங்களும் எழுதுவதில் மாத்திரமின்றி,இலக்கியங்களுக்கு உரைகாண்டலிலும், இனிய வசன இலக்கியங்களை ஆக்குவதிலும்,செய்யுள் யாத்தலிலும் வல்லவராய்த் திகழ்ந்தனர். கம்பருக்கு நிகராகக் காவியஞ் செய்வேன் என்று புகுந்து,கற்றுத் தெளிந்தவர்க்கும் உரைகாண்டற்கரிய, யாழ்பாணத்து அரசகேசரி என்ற பெரும் புலவர் ஆக்கிய இரகுவம்சம் என்னும் நூலுக்கு ஐயர் அவர்கள் ஆக்கிய உரை அவர்களின் பரந்த இலக்கிய அறிவையும்,நுணுகிய இலக்கண அறிவையும்,செய்யுட் சுவையுணர்வையும்  புலப்படுத்தும்.அவ்வுரை ஒட்ப,திட்ப,நுட்பம் பொருந்தியதெனப் போற்றப்பட்டது. இன்னும் அகநானூற்றின் முதல் நூறு செய்யுள்களுக்கும்,நாணிக் கண் புதைத்தல் என்ற ஒருதுறைக் கோவைக்கும் சிறந்த உரை கண்டிருக்கின்றார்கள்.
குசேலர் சரித்திரம்,குமாரசுவாமிப் புலவர் வரலாறு,ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் என்னும் வசன நூல்களும் செய்திருக்கிறார்கள்.அவ்வசன நூல்களின்கண் அமைந்த வசனங்களை நோக்குவோர் இலகுவும் தெளிவும் பொருந்திய அவ்வசனங்கள்,இறுகிய நடையில் கண்டனங்களும் ஆராய்சிக் கட்டுரைகளும் எழுதிய ஐயர் அவர்களின் வசனங்கள் தானோ என்று ஐயுறுவர்.வருத்தலைவிளான்  மருதடி விநாயகர் பிரபந்தம் ஐயர் அவர்களாற் பாடப்பட்டது.அதன்கண் பலவகைச் செய்யுள்கள் அமைந்திருக்கின்றன.அவை ஐயர் அவர்களின் செய்யுள் ஆக்கும் திறனைக் காட்டுவன.இன்னும் பல ஆலயங்களுக்கு ஊஞ்சற் பாக்களும்,நூல்கள் வெளியீடுகளுக்கு வாழ்த்துக் கவிகளும் பாடியிருக்கின்றனர்.
இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களில் மிகத்தொன்மையானது தொல்காப்பியமென்னும்  இலக்கண நூல்.அது தமிழர்களின் நாகரிக பழக்க வழக்க ஓழுங்குகளை ஆராய்வார்க்கு உருதுனைபயக்க வல்லதோர் சீரிய நூல்.அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன.அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்து விட்டன.ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக்காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும்,விளங்குதற் கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன.அவற்றைச் செம்மைசெய்து பாதுகாக்க வேண்டுமென ஐயரவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று.அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்கு அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதிற் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கிப் பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர்.தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர்.இறுதியாக,விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர்.அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா.பொன்னையா அவர்களாகும்.அந்நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும்,மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு,ஐயரவர்களின் குறிப்புகள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்.
பண்டிதர் என்றும் வித்துவான் என்றும் மகா வித்துவான் என்றும் அறிஞர்களாற் சிரபிக்கப் பெற்ற ஐயரவர்களின் ஆற்றலையும் அவர்களின் தொண்டுச் சிறப்பையும் கற்றாரேயன்றி மற்றோர் பெரிதும் அறிந்திலர்.பல பெரியோர் சேர்ந்து ஐயரவர்களின் அறுபதாண்டுப் பூர்த்தி விழா நிகழ்த்தி அவர்களுக்குப் பொற்கிழி அளித்த காலத்திலிருந்தே மற்றோரும் அவர்களின் பெருமையை அறிந்தனர்.ஈழகேசரிப் பத்திராதிபர் நா.பொன்னையா,பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை,கலைப்புலவர்  க.நவரத்தினம்,அதிபர் ச.அம்பிகைபாகன் முதலாய பெரியோர்களின் இடைவிடாத முயற்சியால் இவ்விழா எடுக்கப்பட்டது.இது நிகழ்ந்தது வெகுதானிய ஆண்டு புரட்டாதி மாதம் 22ஆம் (08.10.1933) ஆகும்.