Monday, 5 November 2012

வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி.கணேசையா-பாகம் 5

விழா நிகழ்ந்த இடம் வைத்தீஸ்வர வித்தியாலயம்.அறிஞர் பலரும் பிரபுக்களும் பெருந்திரளாகக் கூடிப்      பலவகையான சிறப்புகளோடும் ஐயரவர்களை வண்ணைச் சிவன்கோயிலிலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அக்காலத்தில் அரசாங்க சபைத் தலைவராக விளங்கிய கௌரவ சேர் . வை.துரைசுவாமி, வண.ஞானப்பிரகாசர்,பண்டிதர்.ம.வே..மகாலிங்கசிவம்,வியாகரண மகோபாத்தியார் பிரமஸ்ரீ வை.இராமசுவாமி சர்மா,பகுதி வித்தியாதரிசி முகாந்திரம்,எஸ்.கந்தையா முதலாய பெரியோர்கள் வீற்றிருந்த அலங்காரமிக்க மேடையில் ஐயரவர்கள் நடுநாயகமாக இருத்தப்பட்டனர்.அறிஞர் பலரும் ஐயரவர்களின் ஆற்றலையும் தொண்டையும் குணநலன்களையும் வியந்து பேசி 2000 ரூபாய் கொண்ட பொற்கிழியையும் பரிசாக வழங்கினர்.இதுபோன்றதொரு கௌரவ விழா யாழ்பாணத்தில் இதற்கு முன்பும் பின் இன்று வரையும் நிகழ்ந்ததில்லை.

1951ம் ஆண்டு சித்திரை மாதத்திலும் ஐயரவர்களுக்கு ஒரு பெருங் கெளரவம் அளிக்கப்பட்டது.சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்த தமிழ் விழாவில் நான்காவது விழா யாழ் பரமேசுவரக் கல்லூரி முன்றலில் 29.04.1951 தொடங்கி 01.05.1951 முடியவுள்ள மூன்று நாள்களிலும் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.தென்னிந்தியாவிற் பல இடங்களிலிருந்தும் இலங்கையிற் பல பாகங்களிலிருந்தும் புலவர்பெருமக்கள் ஒன்று கூடி அவ்விழாவை நடாத்தினர். அவ்விழாவிற் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,சொல்லின் செல்வர் R.P .சேதுப்பிள்ளை,சுதேசமித்திரன் பத்திராதிபர் C.R.ஸ்ரீநிவாசன்,கௌரவ மந்திரி சு.நடேசபிள்ளை,விஞ்ஞான நிபுணர் DR.K.S.கிருஷ்ணன் F.R.S ஆகியோரும் பிறரும் தலைமை தாங்கியும் சொற்பெருக்காற்றியும் பங்கு கொண்டனர்.விழா இறுதி நாளன்று ஐயரவர்களை வலிந்தழைத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். தமிழகத்துச் சான்றோர் பலரும் கூடியிருந்த பேரவையில் உலகப் புகழ்பெற்ற பௌதிக விஞ்ஞான மேதை DR.K.S .கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி ஐயரவர்களைக் கௌரவித்தார்கள்.இக்கௌரவம் மற்றெப் புலவருக்கும் கிட்டாத கௌரவமாகும்.
பகுதி வித்தியாதரிசியாகச் சேவையாற்றிக் காலஞ்சென்ற யா.தி.சதாசிவ ஐயர் அவர்களின் பெருமுயற்சியால் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கப் பண்டித,பால பண்டித,பிரவேச பண்டித பரீட்சைகளுக்குத் தோன்றுவோருக்கு உதவியாகத் தாபிக்கப்பட்ட பிராசீன பாடசாலையிலே ஐயரவர்கள் பல ஆண்டுகாலம் கல்வி கற்பித்தவர்கள்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராலும்,யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாராலும் ஆண்டுதோறும் நாடாத்தப்பட்டு வந்த பரீட்சைகளில் பரீட்சகராகவும் தொண்டாற்றி வந்தார்கள்.ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம் கார்த்திகை மாதம் 16ம் நாள்(01.12.1952) கொண்டாடப்பட்டது.அவ்விழாவில்,முன்னும் பின்னும் நிகழ்த்தப்படாத பட்டமளிப்பு வைபவமொன்றும் நிகழ்ந்தது.அவ்வைபவத்தில் ஐயரவர்கள் வித்துவ சிரோமணி என்னும் பட்டமளித்துக் கௌரவிக்கப் பட்டார்கள்.இன்றுவரை அச்சங்கத்தால் வித்துவசிரோமணி எனப் பட்டம் அளிக்கப்பட்டவர் பிறிதொருமிலர்.
இங்ஙனம் பலவித சிறப்புகளையும் பெற்ற வித்துவசிரோமணியாக விளங்கினாரேனும் ஐயரவர்கள் ஒருபோதும் தற்பெருமை கொண்டதில்லை.சாதாரண ஒரு அந்தணர் போலவே பொதுமக்களோடு பழகிவந்தனர்.நல்லநாள் அறிதல்,மழை வருதல்-வராமையறிதல்,வீடு-கிணறுகளுக்கு நிலம் வகுத்தல்,நினைத்த காரியம் கேட்டல்,ஐயந்தீர்த்தல் என்பவற்றுக்காக ஐயரவர்களோடு பொதுமக்கள் பெரிதும் பழகிவந்தனர்.அவரது தூய தோற்றமும் நல்லொழுக்கமும் மக்களை அவர்பால் மதிப்புக் கொள்ளச் செய்தன.அவர்கள் தேகவியோகம் எய்தியபோது பொதுமக்கள் காட்டிய துக்கம் ஐயரவர்களிடத்து அம்மக்கள் கொண்ட பெருமதிப்பைக் காட்டியது.
பிற் காலத்தில் ஐயரவர்கள் வருத்தலைவிளானில் சனி,ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும்,சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும்,தருக்கசங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள்.