உணர்வுசார்ந்த நுண்ணறிவு.
ஏழ்மை மிகுந்த ஓரூரில் கருணையுள்ள செல்வந்தர் வறிய சிறுவர்க்குசத்துணவு கிடைக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில்ஆலயத்தரிசனத்தின் பிற்பாடு மோதகம் வழங்கி வந்தார்.
வரிசையில் நின்று அவரவரே எடுத்துச் செல்ல வழி சமைத்தார்.
திரண்ட பெரிய பாகம் எடுக்குமெண்ணத்தில் வரிசை முந்த சிறுவர்க்கிடையே பெரும் சமர் நிகழ்வதை அவதானித்தார்.
ஒரு சிறுவன் பண்பாகவே திகழ்வான், அதனால் தினமும் வரிசையிற் கடைசியே!
உள்ளீடு குறைந்த சிறு மோதகமே எஞ்சியிருக்கும், இருப்பினும் மனமார அப்பெரியவருக்கு நன்றி தெரிவித்துப் பெற்றுச்செல்வான்.
அப்பெரியவர்க்கும் அப்பண்பான சிறுவனுக்கு மேலும் பரிசளிக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதே நேரம் மற்றையசிறுவர்க்கும் நற்சிந்தனை
புகட்டவேண்டும் என்றெண்ணினார்.
ஒர் நாள் உள்ளீட்டிற் கீடாக தங்கக் காசினை வைத்து மோதகம் ஒன்றைத் தயார் பண்ணுவித்தார்.
அன்றும் அவ்வாறே சிறுவர்கள் வரிசை மாறி அடிபட்டு மோதகம் எடுத்துச் சென்றனர்.
அச்சிறுவனும் எஞ்சிய அச்சப்பை மோதகத்தைப் பெற்று நன்றி தெரிவித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.
சென்ற வேகத்திற் திரும்பி ஓடி வந்து அவ்வுபகாரியிடம் “ நீங்கள் எனக்குவந்த மோதகத்தினுள் இத்தங்க நாணயம் இருந்தது” எனக் கூறித் திருப்பி ஒப்படைக்க முயன்றான்.
“அது உனக்கான என் சிறு பரிசு, உன் பொறுமையை அவதானித்து வியந்து நானே அதை மோதகத்தினுள் வைப்பித்தேன்” எனக் கூறினார்.
சிறு வயதில் நான் கேட்ட கதையே மேற் கூறியது.
கீழே விபரிப்பது உண்மை நிகழ்வு.
1960 களில் பாலர் வகுப்பிற் படிக்கும் மாணவர்களின் முன்னே மேசைகளில் தட்டில் இனிப்புப் பண்டத்தை (Marshmallows) ஆய்வாளர் ஒருவர் வைத்து “ விரும்பினால் நீங்கள் இப்பவே சாப்பிடலாம், அற்றேல் சற்று நேரத்தில் நான் ஓப்புதல் தரும்வரைகாத்திருந்தும் உண்ணலாம்” எனக் கூறினார்.
அம்மாணவர்களை பல தசாப்தங்கள் அவதானித்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அவ்வாய்வின்படி படிப்பிற் கெட்டிக்கார மாணவரை
விட மனக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமான மாணவர்கள் நல்ல பதவிகளிலும் பணக்காரர்களாகவும் இருப்பது தெரிய வந்தது.
ஒருவரின் நுண்ணறிவாற்றலை விட மனக்கட்டுப்பாடே (பொருள்சார்) வாழ்வில் உயர்வுதரும்.
“பொறுத்தார் பூமி ஆள்வார்”