Tuesday 9 March 2021

மாவைக் கந்தன் பதிகம் பாடல்கள்: 3-4

 தேமதுர மேவுதமி ழாய்புலவ னாகிவரு

     தேசிகசி காமணிசிவன்

சீடனெனு மாறமர வோமெனும காமறையி

     னேருபொரு டேரவருளும்

சாமிகட மாமுனிவ னோடருணை நாதனடி

     சாரவுயர் ஞானமுதவும்

தாதவர னோடெதிர்பு வாதமிடு கீரனுயர்

     தாழ்விரைவி லோர்குகையிலே

யேமமுற வேசிறைசெய் பூதமத னான்மறுகி

     யீகருணை நீயெனவுனை

யீரடிப ராவியொரு பாநுவல வேவியயி

     லேமமவ னேயவருள்செய்

வாமைமக யாமுமுன தீரடிப ராவுவமெ

     மாயவினை மாயவருள்வாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  3


வானமழை யீயவுழல் வாயுவெழ மேதினியில்

     வாழுமுயிர் ஊண்முதலிய

வாழ்வுமுத லானபெற வேதுவென வோதிரவி

     மாகரிய வாழியின்மிசை

ஞானமறை யோர்கள்துதி யோதவுயிர் யாவுமெழி

     னாடியிசை பாடிமகிழ

நாடுகுண மாதியிசை னீடுமொளி யோடுமுற

     னாட வெழின் மாமயிலிலே

பானுமுத லானகதிர் யாவுமளி மூலமெனும்

     பான்மைதிகழ் பேரொளியுடன்

பாலருகி லேதவர்முன் னாரருள்கொ டேகியருள்

     பாலசிகி வாகனவுனை

மானசம தாகவழி பாடுபுரி சோமருள

     வாகனக சோதிவடிவாய்

மாகமுகு வாழைபல வானளவி யேநிறையு

     மாவைநகர் வாழ்முருகனே.  4