Friday 19 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 21-30

 ஏற்றே யருண கிரியார் இசைபா

மாற்றாய் அருளை மகிழ்வாய் அருள்வாய்

தேற்றேம் துதியும் சிறிதென் றிகழா

தேற்பாய் இளையாய் இதுநின் னியல்பே.  21


இயலைத் தமிழுக் கிசைசெய் முனிவன்

அயர்வற் றிடமுற் குருவாய் அருளும்

சயமுற் றியபன் னிருகைத் தலனெம்

மயலற் றிடவுள் ளமதுற் றிடுமே.  22


உறுதீ வினைபேய் உடனோய் பகைமா

சறுமே அலைவந் தலைசந் நிதிவாழ்

அறுமா முகவன் அடியைப் பரவிற்

பெறுபே றுகளும் பெருகும் பெரிதே.  23


பெரிதா மலையிற் பிறழ்பஞ் சருகே

எரிதீப் பொறியொன் றெதிரின் நொடியில்

தெரியா தழியும் திகழா றெழுத்தி

னெரியா வொழியும் எமதொல் வினையே.  24


வினையே னெனினும் விழைவாய் உனைநான்

நினைவே னெனையும் நினைநீ நெடிதாய்

கனைமா கடல்வந் தணைசந் நிதியிற்

புனைமா மயிலிற் பொலிசெஞ் சுடரே.  25


சுடராய் அகமும் புறமும் சுடரும்

அடல்வே லிறைவன் அமரர்க் கரியான்

திடமா யுறைசந் நிதிசென் றடையின்

உடனே உடலுள் உயிர்நோய் கெடுமே.  26


கெடுமென் றுடலங் கிடைபோ தறனா

டிடுவார் நிதமும் இயல்சந் நிதியில்

நெடுவே லிறைவன் இருதாள் நினைவே

அடுமெம் மதமென் றறிவாய் அகமே.  27


அகமென் மலரன் றதுகல் அதனை

நெகவென் றருளி நிலைநின் றிடுவாய்

குகவன் றிசையாக் குறவர் கொடியின்

அகமொன் றிடவென் றலைவாய் மலையே.  28


மலைவே டுவர்கள் மதுவூன் மிசைவார்

கொலையார் அவர்கொள் குரவைக் கலைவாய்

இலைவே லிறைவா எதுநன் றறியா

நிலையே மையுங்காத் திடுவாய் நிதமே.  29


நிதமன் றுணடம் புரியும் நிமலன்

சுசசெந் தமிழின் சுவைதேர் புலவ

சதமென் றுனையே நினைவார் தமையும்

இதமீந் தருள்வாய் இகமே பரமே.  30