Thursday, 15 November 2012

காதல்

நளமகாராசன், புட்கரனுடைய கேள்விக்கியைந்து சூதாடமுற்பட்ட போது, நளனுடைய மந்திரிமார் சூதாடல் கூடாது என்று அவனுக்குப் புத்திமதி கூறினர்.அவர்களின் புத்திமதிகளில் ஒன்றாக அமைவது;

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய் -போதில்
சினையாமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி

என்னும் இப்பாடல்.இதில் ஐந்து பெரிய பாவங்கள் கூறப்படுகின்றன.அவற்றில் ஓன்று காதல் என்று கூறப்படுகின்றது.புனிதமான அக்காதல் என்பதனைப் பாவங்களில் ஒன்றாகக் கூறல் பொருந்தாது எனக்கருதும் உரைகாரர்கள் அது காமத்தைக் குறிக்கின்றது என்று கருதிப் போலும் அதற்குப் பெண்ணாசை என்று பொருள் கூறுகின்றனர்.

புகழேந்திப்புலவர் அப்பொருளைக் கருதியிருந்தால் காமங்கவறாடல் என்று பாடியிருக்கலாமே.ஆதலால் அவர் காதல் என்பதற்கு வேறு பொருள் கருதினார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.அவர் எப்பொருளைக் கருதியிருப்பார் எனோது பற்றிச் சிந்திப்போம்.

நச்சினார்க்கினியார் தொல்காப்பிய எழுத்ததிகார உரையில் காது என்ற சொல்,கொல் என்னும் பொருளில் வரும் என்று கூறியிருக்கின்றார்.காது என்னும் வினையடி தல் என்னும் தொழிற்பெயர் விகுதி கொள்ளும் போது காதுதல் என்றும் அல் என்னும் விகுதி கொள்ளும் போது காதல் என்றும் வரும்.எனவே அச்சொலிற்குக் கொலை என்ற பொருளும் உண்டு என்பது விளங்குகிறது.புகழேந்தியார் அச்சொல்லிற்குக் கொலை என்றே பொருள் கொண்டார் என்பது தெளிவாகிறது.

இலக்கியத்தும் அச்சொல் கொலை என்ற பொருளில் வந்திருக்கிறது.காது மத மாகரத்த யானை என வருதல் காண்க. இச் செய்யுட் பகுதிக்கு 'கொல்லுகின்ற மதத்தினையும் பெரிய கையினையும் உடைய யானை' என்றே பொருள் கொள்ளப்படுகின்றது.

இனி, அப்பொருளைக் கொண்டேயாக வேண்டுமென்பதற்கும் காரணமுண்டு.
கொலைமிகப் பெரிய பாவம் என்பது திருவள்ளுவர் முதலிய பெரியவர்களின் கருத்து.
பஞ்சமா பாதகங்களை வெவ்வேறு வகையாகக் கூறுகின்றவர்கள் யாவரும் கொலையை அப்பாதகங்களில் ஒன்றாகக் கூறுவதில் தவறில்லை. கொலை, களவு, கள், காமம், சூது எனக் கொலையை முன் வைத்து எண்ணுதல் காண்க. புகழேந்தியாரும் கொலையை முன் வைத்தெண்ணினார் என்று கொள்ளல் மிகப் பொருத்தமேயாகும்.