Tuesday 6 November 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 7

தொல்காப்பிய உரைக் குறிப்புகள் எழுதுங் காலத்திலும் பிற ஆராய்சிகள் செய்யுங் காலத்திலும் ஏற்பட்ட தடைகள் பற்றி எங்களோடும் கலந்து பேசுவார்கள்.தடைசிறிதெனினும் அதற்கு முடிவுகாணாது அமையமாட்டார்கள்.சில நாள்களில் அதிகாலையே எங்களைச் சந்தித்து 'நேற்றைய சிக்கலை விநாயகன் இராத்திரித் தீர்த்து வைத்துவிட்டான்"என்பார்கள்.அவ்வளவுக்கு அவர்களிடம் விநாயகனிடத்து நம்பிக்கை இருந்தது.

மருதடி விநாயகர் பிரபந்தத்தை ஆறுதலாக நோக்குவோர்க்கு ஐயரவர்களின் உள்ளம் எங்கே நின்றதென்பது விளங்காமற் போகாது.மருதடி விநாயகர் பிரபந்தத்தின் உட்பிரிவாகிய மருதடி விநாயகர் அந்தாதியில்,

'அறியாமை நீக்குறுங் கல்வியென் றெண்ணி அலைவுற்றயான்
சிறியார்கள் செய்த மணற்சோ றதுவெனத் தேர்ந்து கொண்டேன்
செறியா மலர்சேர் மருதடித் தேவநின் சேவடியே
அறியாமை தன்னை அகற்றுவ தென்ப தறிந்தபின்னே'

என ஐயர் அவர்கள் பாடியது அவர்களது அனுபவத்திற் கண்ட உண்மையினையே என்பதை அறிந்தார் அறிவர்.பொன்னாடை போர்த்தல்,பொற்கிழி வழங்கல்,பட்டம் அளித்தல் என்பவைகளுக்கு ஐயரவர்களை ஒருப்படுத்தி அழைத்துச் செல்வதில் தாங்கள்பட்ட கஷ்டங்களை அவற்றிலீடுபட்ட பெரியார்கள் வாயிலாகப் பிறரும் அறிவர்.

அக்காலத்தில் அதிகாரம் படைத்த அரச உத்தியோகத்தில் இருந்த பெரியார் ஒருவர் ஐயரவர்களுக்கு அரசினர் மாதம் மாதம் சன்மானமாகப் பணம் வழங்கு வதற்கேற்ற ஒழுங்குகள் செய்துவிட்டு ஐயரவர்களின் சம்மதத்தைப் பெறுவதற்குத் தாம் நேரே சென்று பேச அஞ்சி,பிற பெரியோர்களை விட்டுப் பேசுவித்ததை நாங்களும் அறிவோம்.

இங்ஙனம் எப்பற்றுமற்று அறக்கனிந்த கனியாக விளங்கிய ஐயரவர்கள் தம தமது எண்பத்தொன்றாவது வயதில் ஆங்கில வருடம் 1958க்குச் சரியான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 23ம் நாள் (08.11.1958) சனிக்கிழமை காலை ஆறுமணியளவில் தமது ஆசிரமத்தில் சட்டென உடலை விட்டு எம்பெருமான் திருவடிநீழல் சென்றெய்தினர்.நட்சத்திரம்:உத்தரம்,திதி:அபரத் துவாதசி.

பெரும் பொருளும் புகழும் பூசனையும் பெறத்தக்க ஆற்றல்,தகுதிகள் இருந்தும் அவை தம்மைத் தேடிவந்தும் அவற்றை விரும்பாது இறைவன் திருவருட்பேறொன்றே கருதி வாழ்ந்த ஐயரவர்களைத் தமிழுலகம் தமிழ்முனிவர் எனப் போற்றுகின்றது.அவர்களது நிழற்படமும் அது தக்கதெனப் பறைசாற்றுகின்றது.ஐயரவர்களின் வாழ்க்கை வரலாறு எனையோருக்கு வழி காட்டுவதாக.

முற்றும்.

தமிழ்மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக்குழு, மகாஜனாக் கல்லுரி,தெல்லிப்பழை,1977.