Thursday, 18 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் :11-20

போநன் னெறியிற் புகுதா தவமே

ஈனம் புரிவார் இடநா னடையா

தாநந் தமயம் அடைதற் கிடமா

ஞானம் தருவாய் நமையாள் முருகே.  11


முருகார் கமலத் தமர்நான் முகனைப்

பெருமா லகலச் சிறைசெய் பெருமான்

குருகார் தருசந் நிதியிற் குமரன்

இருதாள் அடியர்க் கிருமா நிதியே.   12


நிதியைக் கருதி நிலைநீ தியினை

மதியார் மனதில் மருவா முருகன்

கதியே துமிலா ரெனினும் கரவா

மதியார் மனதில் மகிழ்வாய் மனுமே.  13


மன்னும் அறமும் பொருளும் மகிழ்வும்

துன்னும் படியெற் கருள்செய் சுரரும்

இன்னல் களைதற் கிடமா யணுகும்

நன்னர் தருசந் நிதிநம் பதியே.  14


பதியென் றொன்றில் லாதார் பயில்சந்

நிதியன் றன்பொன் னீடா ணினையிற்

கதிவந் தொன்றக் காரா கடவி

குதி கொண் டெம்மைக் கூடா னிசமே.  15


நிசமா றுமுகன் நெடுமா மறையை

அசபா சுவரம் புரிவோ ரடைவார்

கசமே டமயில் களைவா கனமேல்

புசமா றிருபொற் பொறையான் தயவே.  16


தயவா யொருசொல் தருவாய் குருவாய்

உயநா மெனநின் னடியார் உருகா

அயர்வா ரவரை விடுவா யலையே

கயவாய்க் கருள்சங் கரனார் மகனே.  17


மகனோ சிவனோ மருவோ மலரோ

அகமோ புறமோ அருவோ உருவோ

இகமோ பரமோ இருளோ ஒளியோ

குகனே நினைநாம் கொளுமா றெதுவே.  18


எதுவென் றுணரக் கரியாய் எனினும்

மதுவொன் றுவையன் புறுவார் மனதில்

மெதுவென் றுதவழ் சிறுகால் வெயிலை

விதுவென் றுசெய்சந் நிதிவேல் விறலே.  19


விறல்சேர் சூரன் மிகுமா யையினான்

அறமார் தேவர்க் கருநோய் புரிவான்

இறவே லேவும் இளையோன் அடியார்

உறவாய் ஞான ஒளியேற் றிடுமே.  20