Thursday, 15 November 2012

நாடகம்

 மாணிக்கவாசகசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நாடகத்தால் உன்னடியார் எனத் தொடங்கும் திருப்பாடலிலலமைந்த நாடகம் என்ற சொல்லுக்கு முத்தமிழில் ஒன்றாய நாடகம் என்பதுணர்த்தும் பொருளைப் பொருளாகக் கொண்டு உரை கூறப்படுகின்றது.அங்ஙனம் உரை கூறப்படுவது பொருத்தம் போற்காணப்படவில்லை.

அவ்வுரைக்கு, நாடகத்தால் என்பது நடித்து என்பதனைக் கொண்டு முடிவதாகக் கொள்ளல் வேண்டும்.நாடகத்தால் நடித்து என்பது நடையால் நடந்து என்பது போலப் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.மேலும் நடித்து என்ற சொல்லே அப்பொருளைத் தருதலால், நாடகத்தால் என்பது அங்கு வேண்டாத சொல்லாகக் காணப்படுகிறது.

நாடகத்தால் உன்னடியார் என்ற தொடரை, நாடு,அகத்தால்,உன் அடியார் எனப்   பிரித்து, நாடு அகம்,உன்னடியார் என்பவற்றை வினைத்தொகைகளாகக் கொண்டு,அவற்றை நாடுகின்ற அகத்தால், உன்னுகின்ற அடியார் என விரித்து,விரும்புகின்ற மனத்தினாலே,இறைவனை நினைக்கின்ற அடியவர் எனப் பொருள் கொள்ளலாம். அங்ஙனம் கொண்டால்,மெய்யடியவர் இலக்கணம் பெறப்பட்டு,அம்மெய்யடியவர் போல் நடித்து என்றியைந்து பொருள் சிறக்கும்.

இறைவனை விரும்புவதும் அவனையே இடையறாது நினைந்திருத்தலும் மெய்யடியார் இயல்பென்பது
திருவருட்பாக்கள் தோறும் பரந்து காணப்படும்.ஆன்மா எதனை நெடிது நினைக்கின்றதோ அதன் வண்ணமாகும் என்பது அறிஞர் கருத்து.

மெய்யடியாராகிய மாணிக்கவாசக சுவாமிகள்,தம்மை மெய்யடியார் போல நடிப்பவராக இழித்துக் கூறியது அவர்தம் ஆணவமற்ற இயல்பைக் காட்டி அவர்தம் உயர்வைப் புலப்படுத்துகிறது.இங்ஙனமே
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்பன முதலியவாகப் பிற இடங்களிலும் கூறுவது காணத்தக்கது.

'சைவநீதி' ஈசுர ஆனி 1997