Thursday 15 November 2012

அந்தணன்

சைவர்கள் இறைவனின் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவதுண்டு.அது ஒன்றன் பெயர் மற்றொன்றற்காதல் நோக்கி ஆகுபெயருள் அடக்கிக் கொள்ளப்படும்.ஆயின்,மக்களின் பெயரை இறைவனுக்காக்கி வழங்குவதில்லை;வழங்கவும் கூடாது.

அந்தணன் என்ற சொல் ஒரு சாதிப் பெயராக வழங்குகின்றது.திருவள்ளுவநாயனார், அறவாழி அந்தணன் என அதனை இறைவனின் பெயராக வழங்குகின்றார்.ஆதலின்,இவ்விடத்தும் அந்தணன் என்ற சொல்லை இறைவனின் பெயராகக் கொண்டு சாதிக்கு ஆகுபெயராகக் கொள்வதே பொருத்தமானது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

என்ற குறளில் (30) திருவள்ளுவநாயனார்,அந்தணர் என்ற சொல்லை,தண்மையுடைமையால்  வந்த காரணப் பெயராகக் கொள்ளுகின்றார்.அறவோரே,தண்மையுடையராதல் கூடுமாதலின்,அறவோரே அந்தணர் எனப்படுவார்.

அறத்தை உரைத்த முதல்நூல் ஆசிரியனும் அறச்சமுத்திரமுமாகிய இறைவனே அந்தணன் எனப்படுவான்.இலக்கணத்தில்,இறைவனே முதல்நூல் ஆசிரியன்.அவன் வழிப்பட்ட பிறரும் முதல்நூல் ஆசிரியர் ஆவார் என்று கொள்ளுமாறு போல,அறமுணர்ந்து இறைவன் அருள்வழிபட்ட ஏனையோரும் அந்தணர் எனப்படலாம்.

மேற்கூறியவற்றால், அந்தணன் என்ற சொல் காரணஇடுகுறிப் பெயராய் இறைவனையும், காரணப் பெயராய் ஏனையோரையும் உணர்த்துமென்று கொள்ளலாம்.அந்தணர்க்கு மக்களாயினரையும், அவர்கள் அந்தண ஒழுக்கம் அற்றவராயினும்,அந்தணர் என்று வழங்குவதுண்டு. அவ்விடத்து அந்தணன் என்ற சொல்லை இடுகுறிப் பெயரளவில் கொள்ளுவதே பொருந்துவதாகும்.

'சைவநீதி' ஈசுர வைகாசி 1997.