Sunday 28 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 61-70

வேளைப் பொடிசெய் விழியா லருள்செவ்

வேளைப் பணியின் விதிதேய் வுறவாழ்

நாளைக் குறுகான் நமனும் நமதுட்

கோளைக் கொடுமெய்ந் நெறிகூ டுறுமே.  61 


உறுமா தவர்வந் துறைசந் நிதியைக்

குறுகக் குறுகக் கொடுநோய் வினைகள்

குறுகக் குறுகும் மகிழ்வுங் குணமும்

வறுமைப் பிணியும் மயலுங் கெடுமே.  62


கெடலற் றொலியாற் கிளர்வுற் றலைமா

கடலிற் றிரைபோற் கடுகும் வினையால்

உடலுற் றலைவேற் குளகன் மமெலாம்

விடவெற் பெறிவேல் விடுசற் குருவே.  63


குருவாய் மருவிக் கொடுமா ணவமோய்

தருமா றுகடைக் கணைநீ தருவாய்

மருவார் புரமூன் றடுசே வகனார்

தருபா லகனே சமரா திபனே.  64


அதிபன் அமரர்க் கதிமா யையினர்

திதிபுத் திரரின் திறல்கொல் விறலான்

கதியற் றவரின் கதிசந் நிதியில்

வதிநம் பதிசண் முகசெம் மணியே.  65


மணிமந் திரஔ டதமாய் மனமெய்ப்

பிணிகொன் றடியார்க் கருளும் பெருமான்

தணிவின் றலையோ சைதவர் துதியுள்

விணிலொன் றிடுசந் நிதிமே விடனே.  66


இடனில் பருவத் திலுமுன் னமிடுங்

கடனார் பயில்சந் நிதியைக் கருதா

மடவா ரெனினும் ஒருநாள் வரினும் 

திடமாய் அருள்வன் திருவே ரகனே.  67


திருவே ரகஞ்செந் திபரங் கிரியே

உருவா வினன்கு டிபழம் முதிர்கா

திருமால் வரைக திரைசந் நிதிவாழ்

தருகுஞ் சரிகா தலதா சரணே.  68


சரணென் றமரர் தலைவன் பணிய

வரனொன் றியசூர் மயில்சே வலெனும்

உருவொன் றவுடம் பிடியா லுடல்போழ்

உரனொன் றியசேய் அடியா ருறவே.  69


உறவாய் அயலாய் உடனாய் உறுநின்

திறனார் அறிவார் திருமா மறையின்

அறனாய் அறனுக் குமகப் படலில்

பிறவா முதலே குககா பெரிதே.  70