Wednesday 24 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 51-60

 முதலாய் நடுவாய் முடிவாய் முழுதாய்

நிதமாய் ஒளிரும் ஒளிசந் நிதியில்

பதபங் கயமெய் யடியார் பரவ

உதயம் புரியும் உருவொன் றிடவே.  51


ஒன்றும் முடலும் மிகையென் றுனையே

நின்றும் இருந்துங் கிடந்தும் நினைவார்

துன்றும் பவநோய் துடைதே சிகனே

என்றுன் னருளென் றெணிவா டுவனே.  52


வாடும் பயிர்வான் மழைநா டிடல்போல்

நீடும் புவியில் நினைநோக் குவனான்

ஆடும் மயின்மே லழகா இனிநாள்

நீடும் படிநீ விடில்நிற் கழகே.  53


அழகன் பிளமை அறிஞா னமருள்

பழகன் பினருக் கருள்செய் பவனாய்ப்

பழமொன் றுபெறப் பலபா டடையும்

குழகன் குளிசந் நிதிகூ டிடுமே.  54


கூடும் உடலின் பசியும் குலையா

வாடும் மனதின் பசியும் வளரா

நீடும் உயிரின் பசியும் நிலையா

தோடும் படிசந் நிதியாய் உதவே.  55


உதவா அசுரர்க் கொருபன் னிருகை

பதநா டமரர்க் கிருதாள் பரியா

நிதமா றுமுகன் நெடுமா கடல்சேர்

இதசந் நிதிவாழ்ந் திறைசெய் திடுமே.  56


இடவென் றருளும் பொருள்கொண் டிசைசீ

ருடனன் றறமும் பெறுமா றுதவா

துடல்விண் டழிவா ருறுதிண் ணிருளார்

இடனொன் றலிலா தெடுசேய் எனையே.  57


எனையே யறியான் எனிலெங் குநிறை 

நினைநா னறிமா றிலையே நெடிதாய்

நினைவே னினைவில் நினருள் வடிவாய்

எனையாள் குகவந் திருவின் புறவே.  58


உறுநட் புபகை எனவே றுணரும்

மறுகற் றொருமை உணர்வே மருவப்

பெறுதற் கருள்செய் பிறைபாம் பருகே

உறுபொற் சடையா னுதவொள் ளொளியே. 59


ஒளியார் மனதுக் கொளியாய் ஒளிர்வான்

ஒளியா மனதுக் கொளியா தொழிவான்

அளிபா டிசைகொண் டலர்தேன் மலரா

அளிகா வுறுசந் நிதிவே ளவனே.  60