Sunday 21 February 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 41-50

 வெளிகால் தீநீர் நிலனாய் மிளிர்வான்

தளிகொண் டேசந் நிதியில் தழையும்

ஒளியாய் அன்பா லுருகும் அடியார்க்

கெளியா னாகி வெளிவந் திடுமே.  41


வந்தே யருள்வாய் மயின்மே லமர்வாய்

கந்தா எனவிண் ணவர்கள் கதறப்

பந்தத் தவரப்பகவர்க் கருளான்

நந்தற் புறுமண் ணவர்பால் நணுமே.  42


நண்ணிச் சிறியோ னாய்நா வலிலே

உண்ணக் கனிகள் ஔவைக் குதவிக்

கண்ணுக் கினிதாம் காண்பீந் தவனெம்

வண்ணச் சிறையார் மஞ்ஞைப் பரனே.  43


பரனரு ளறுமுக சரவண பவகுக

பிரணவ கணபதி பினருறு பெரியவ

சுரபதி வனபதி திதிதரு மருமக

வரமளி வழிபட நினதடி மலரே.  44


மலரும் புவனம் முழுதும் வடிவாய்

நிலவும் உயிராய் நிறைசண் முகனே

அலரும் கிருபா கரனே யருள்வாய்

மலகன் மமெலாம் மருவா வகையே.  45


வகையார் அவலக் கடலின் மருவும்

தொகையார் சுழியிற் சுழலும் தொடர்பைத்

தகையார் பதமீந் தருளித் தகையாய்

குகையார் கவுஞ்சங் குடைவே லவனே.  46


வேலா மயிலா முருகா விமலா

காலா யுதகே தனனே கவுரி

பாலா குழகா பரசந் நிதியாய்

மாலா லழியா மையெனக் கருளே.  47


அருளிக் குமர குருப ரனையாண்

டிருளைப் பொடிசெய் தெழுசெஞ் சுடரே

குருளைக் கருள்செய் குழகன் குமரா

மருளற் றிடவெற் கருள்கண் மணியே.  48


மணிகண் டனருள் மதலாய் புலவர்

துணிவொன் றவுரை நயமாய் சுரனே

பணிவென் றனையும் படரும் விதிகொன்

றணிகொண் மயிலாய் அணையென் உளமே.


உளமோ கணமா கிலுமோய் கிலதாய்க்

குளகுக் கலையா டெனவே குலைய

அளவா இடர்வாய் அமிழ்வேற் கருளித்

தளரா வகைகா தனிவேல் முதலே.  50