சந்நிதிக் கந்தர் சதகம் 31-40
பரமும் உளதென் பதுதேர் கில்லா
திரவும் பகலும் இகமே நாடும்
நரர்போ லழியா வகைநீ நல்காய்
வரசந் நிதியில் வதிசெவ் வேளே. 31
வேளைப் பரவி மிளிர்சந் நிதியில்
தாளைத் தலையில் தரியா தவர்வாழ்
நாளைப் புவியில் நரகத் தினிலே
பீழைப் படுமா பெரிதுய்ப் பவரே. 32
உய்க்கும் வினைவந் துறநா னுழல்வேன்
எய்க்கும் படியா இனியும் விடினீ
பொய்க்கும் உடலப் பொறைகொண் டடியேன்
உய்க்கேன் எனையாள் உமைபா லகனே. 33
பாலப் பருவத் தவனென் பதுனிச்
சாலப் பழிசூர் தனையும் அருளும்
வேலப் பனெமை விடுவா னலனீ
மாலற் றலையா திருவென் மனனே. 34
மனத்தா னினைத்தால் வனத்தா ளளிப்பான்
வனத்தான் அனத்தான் தனைத்தாழ் வரத்தான்
சினக்கா லனைத்தா னுதைத்தாள் திருத்தா
ளெனத்தா வெனத்தான் தனைத்தாழ் குகத்தே.
தேவா வாநா னோவா தேகா
மாவா னானா மாயா மாசூ
ராவா னோயா வீமா றாவே
லேவா மாலா னோநீ யேறே. 36
ஏறக் கரமுச் சியினா விசையோ
டாறக் கரமும் அமைவாய் நவில
வேறற் றிருதாள் நினைவார் விழையும்
பேறத் தனையும் பெறல்நிச் சயமே. 37
சயமா மயிலில் தகைமா திருவர்
தயவா யருகே யமரத் தனிவேல்
துயகை யொளிரத் தொழுசந் நிதியாய்
அயர்வற் றிடவந் தணையென் னகமே. 38
அகமெய் யதனால் அறின்மா சறுமா
முகனின் றருள்வன் அதனில் முகமும்
மிகநன் றலரும் மிடிநோ யகலும்
இகமும் பரமும் சுகமெய் திடுமே. 39
எய்துஞ் சுகமென் றெணிமா தவர்வந்
தெய்துந் தலமே ரிசைசந் நிதியங்
குய்யும் படிதன் னடியார் ஒளிர்வேற்
செய்யன் மயில்மேல் வெளிவந் திடுமே. 40
<< Home