Wednesday 3 March 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 81-90

 அதுவென் றிதுவென் றுதுவென் றகிலத்

தெதுவென் றுபுறத் தினிலே இனையா

ததுவென் னுளதென் றறியென் அகமே

அதுசந் நிதியான் அடிமென் மலரே.  81


மலரன் பினிலே மலரும் மதுவாய்

மலமூன் றறமெய்ம் மகிழ்வும் தருவான்

நிலவொன் றியவே ணியன்சேய் நெடுவேல்

வலனேந் தியசந் நிதிவாழ் வரனே.  82


வரமுன் பெறுவன் குறவர் மகளைக்

கரவிற் புணரக் கருதிக் கிரியில்

இரவிற் பகலில் இளைவே டனடி

வரவென் குறையென் மனமும் வரையே.  83


வரையா றுகுளம் வளர்சோ லைவனம்

விரைதீண் டுதறி நிலைமன் றுபொது

வரைநீ டுகடம் பிவைமே வியருள்

பரைபா லனுறை பதிசந் நிதியே.  84


நிதியின் நினைவாய் இர்ணெஞ் சினுளே

பொதியும் பொருளாய் மறையும் சிலபோ

துதிமின் எனவே ஒளிரும் மறையும் 

துதிசந் நிதியிற் சுடரும் சுடரே. 85


சுடரீ சுவரன் தொகுமைந் துமுகம்

இடனொன் றிறைவி முகமொன் றிவைசேர்ந்

திடவா றுமுகம் இயைபூ ரணகுக்

குடவேர் கொடியாய் குறையா தருளே.  86


அருளிப் பகழிக் கருநோ யகல்வித்

தருமுத் தவடம் அணிசந் நிதியாய்

வருதுக் கமெனும் வளர்வெம் மையினோம்

பருகக் கருணைப் பனிநீர் தரவே.  87


தருக சரணெந் தலையி லணிய

வருக மலரெம் மனதி லணைய

முருக வெனசந் நிதியை முடுகி

உருகு மவரின் புறுவ ருறவே. 88


உறுவ தறியா துலகி லலைவேன்

பெறுவ தறியாப் பெருகு துயரேன்

மறுகி லலையா மருவு நிலையேன்

சிறுகு மரனே தெளிவி மனனே.  89


மனது முனதென் மதியு முனதே

உனதெ னுடலும் உயிரு முனதோ

எனதெ னவினி யுளதெ துகுகா

எனது பணியென் னெனின துனதே.  90