Monday, 1 March 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 71-80

 பெரிதாய்ச் சிறிதாய்ப் பிறழ்வாய் பிறவாய்

அரியாய் எனினும் அருளால் அடியார்க்

குரியாய் அவர்வேண் டுருவாய் வருவாய்

தெரியா மயலேற் குமருள் சிறிதே.  71


சிறிதும் அருளின் திறனாய் கிலனாய்

வறிதே பொழுதைக் கழிமா யையினேன்

பொறிவா யெலியுண் பொருள்நா டிடல்போல்

அறியா தலைவேன் அளியாய் அளியே. 72


அளியூண் மதுவுக் கமையா தலையாக்

களியா டிடல்போற் கணமாய் பொருளுக்

களியே னயர்வேன் அறியா மயலைக்

களிமஞ் ஞையகட் கடையால் ஒழியே.  73


ஒழியா தருளாய் உலகெங் குநிறை

மொழியா லளவா முதல்சந் நிதியில்

விழிநா டிடமெய் யுருவாய் மிளிரும்

அழியா தருள்முன் னிடுமார் வலர்க்கே.  74


வலருக் குவலன் மலர்வா ளிமதன்

உலவுற் றவழல் உருவாய் வருவான்

அலவுற் றடிசார் பவருக் களியன்

நிலமுற் றமரும் பதிசந் நிதியே.  75


நிதியும் வதியும் பதியும் நிலையும்

கதியும் தருவன் கருதா நிருதர்

அதிரும் படிவேல் விடுவான் அடியைத்

துதிசெய் திடின்மும் மையினுஞ் சுகமே.  76


சுகமுற் றிடுகென் றுதவர் சுரரோ

டகநெக் குருகித் தொழுமா றுமுகன்

இகமுற் றினிதா யமர்சந் நிதியிற்

புகவற் புதவின் புறுமன் புறவே.  77


உறுகா மசினத் தொடுமால் முதல்மா

சறும்ஞா னபிர பையுறும் அரனார்

சிறுபா லனடிச் சிறுதா மரையுள்

உறுமே லதுநாம் உடல்கொள் பயனே.  78


பயனொன் றறியா திரவும் பகலும்

துயரொன் றுலகச் சுகநா டியலை

மயலின் றுனையான் மறவா மையருள்

செயமுன் வருவாய் செயசே வலனே.  79


வலனைச் சமரில் தொலைசெய் மகவான்

கலகத் தவுணர் களினால் அலைவான்

வெலவுன் பதமேல் விழவேல் விடுவாய்

அலருன் னடியென் னகமே லதுவே.  80