Thursday 4 March 2021

சந்நிதிக் கந்தர் சதகம் 91-100

 உனது கரமீ துளது வடிவேல்

தனது ருவுபோ தமெனி னதனை 

எனது ளிருளோ டியற விடுவாய்

வனச ரபதி மதிம ருகனே.  91


மருக திருமால் மகவு பெருமான்

அருவ உருவா யணுவி லுயிராய்

வருகு மரசந் நிதியி லுறைவாய்

தருக நினதாள் தமில்நி ழலதே.  92


நிழலில் வறுங்கோ டையில்நீர் நிலையென்

றழல்கா னலைவேட்  டலைமா னெனநான்

உழல்வேன் அலையா தருள்நீர் உதவிக்

கழலீந் தருள்சங் கரிபா லகனே.  93


பாலன் குமரன் பதறுங் கிழவன்

மாலன் மருகன் மயிலன் மலையன்

வேலன் விமலன் விபுதன் விறலன்

பாலன் பினர்துன் பமிலின் பினரே.  94


இன்பத் தமிழின் இசைபா தருநே

சன்சற் குமர குருதா சனின்மீ 

தன்புற் றடிஞா னமளித் தவமெம்

புன்சொற் செவியுட் புகுமோ தகவே.  95


தகவார் சிறுவர் தமொடா டியவர்

அகமே விமணால் அமைபிட் டதுண

மிகவா வியவந் ததுவாக் குதலம்

குகசந் நிதியோ குடியே றிடனே.  96


இடர்னார்ந் தெழுபூ வரசில் எழில்கொள்

மடனார் இளைஞ ரொடுபல் வடிவாய்

உடனா டியசந் நிதியுன் உறைவோ

நடனா டிடுகே கயமேல் நடனே.  97


நடனா டிமகன் நமொடா டிடுமென்

றெடுகா வடியர்க் கிடையா டிடுவான்

கெடவூ னநடம் கிளர்ஞா னநடம்

எடுசேய் நடனா டடிநா டகமே.  98


அகமோ நிலையில் உலகில் அலைய

மிகவாய் துதிபா டிடிலென் விளையும்

சகமீ துனையெத் தருணந் தனிலும்

குகநான் மறவா மையருள் குருவே.  99


குருவே வருக குமரா வருக

திருவே வருக சிவசேய் வருக

முருகா வருக முதலே வருக

வருக வருக வனசெம் மலையே.  100


வேலும் மயிலும் துணை.


கட்டுவனூர் திரு க. சின்னப்பு அவர்களாற் பதிப்பிக்கப் பட்டது. பிரமாதீச கார்த்திகை 1973.