Friday 16 November 2012

இராறுதோள்

 கந்தபுராணத்திலே மூவிரு முகங்கள் போற்றி என்றோர் அறுசீர் ஆசிரியவிருத்தம் வருகிறது.அதில் முதலாம் அடியில் நாலாம்சீர் முகம்பொழி என நிரையும் நிரையும் சேர்ந்த ஈரசைச் சீராய் அமைகிறது.
அதற்கியைய இரண்டாம் அடியின் நாலாம் சீரும் நிரைநிரையாக அமையின் ஓசை சிறக்கும்.

அதனால் கட்சியப்பசுவாமிகள் அச்சீரை ஈராறுதோள் என்று அமையாது,செய்யுள் செய்யும்போது ஆசிரியன் வேண்டுமிடத்து நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலாம்(குறுக்கல்) என்ற உரிமையால் 'ஈ'என்ற எழுத்தை 'இ' ஆகக் குறுக்கி இராறுதோள் என நிரைநிரைச் சீராக அமைத்தனர்.

அச்செய்யுளைப் பாடுவோர் சிலர் இராறுதோள் என்பதைப் பிழையென்று கருதிப்போலும் ஈராறுதோள் என்றே பாடுகிறார்கள்.அவர்கள் ஈராறுதோள் என்று பாடுகையில் ஓசை நீண்டு போதலே ஈராறு என ஒரு சீர்கொண்டு,தோள் என்பதை வேறு பிரித்து,அது தனியசையாதலின் அதற்கு கள் என்ற விகுதி கொடுத்துத் தோள்கள் என ஈரசைச்சீர் ஆக்குகின்றனர்.அதனால் தோள்கள் என்பது ஐந்தாம் சீராக,அடுத்துவரும் போற்றி என்ற சீரோடு அவ்வடி நிறைவுறுகின்றது.இறுதியில் நின்ற காஞ்சி என்பது அங்கும் சேராமல் இங்கும் சேராமல்,நிற்க,எப்படியோ சமாளித்துப் பாடி முடிக்கின்றனர்.அதனை
'இராறுதோள் போற்றி காஞ்சி' என்று பாடுவதே தக்கது.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

இது போலவே பரமனைமதித்திடா என்ற புராணப்பாவில் மூன்றாம் அடியின் கடைசிச்சீரைத் தண்டமும் என்று பிழையாகப் பாடுவோரும் உண்டு.ஒரு தலை கிள்ளலும்,குருதியும் அகந்தையும் கொள்ளலும் தண்டங்களாக,பின்னும் தண்டமும் புரிதரு வடுகன் என்னல் ஆகாது.ஆகுமேல்,முற்கூறிய இரண்டும் தண்டங்கள் ஆகா என ஆகும்.ஆதலின் 'தண்டமுன் புரிதருவடுகன்' என்று பாடங் கொள்ளுவதே தக்கது.

பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியு மகன்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.

'சைவநீதி', ஈசுர புரட்டாதி 1997

சிரங்குவிவார்

 கரங்குவிவார் உண்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

என்ற திருவாசக அடிகளுக்குக் கையினை நெஞ்சின் நேரே கூப்புவார் மனம் மகிழுதற்குக் காரணமான இறைவனின் பாதங்கள் வெல்வன ஆகுக.அக் கைகளைத் தலையிலே வைத்து வணங்குவாரை உயர்விக்கும் சீரினை உடைய இறைவனுடைய பாதங்கள் வெல்வனவாகுக
என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளப் படுகிறது.அங்ஙனம் பொருள் கொள்வது பொருத்தமானது
போலத் தெரியவில்லை.

கரங்குவிவார் என்பதில் குவிதல்வினை கரத்துகுரியது.சிரங்குவிவார் என்பதில் குவிதல்வினை சிரத்திற்குரியது;கரத்திற்குரியதன்று.கரங்குவிவார் என்ற தொடரில் இன்ன இடத்துக்கு நேரே என்றாவது இன்ன இடத்தில் வைத்து என்றாவது இடஞ் சுட்டிக் கூறப்படவில்லை.ஆதலால்,சிரத்திலே வைத்துக் கைகுவித்தலையும், இவ்வொரு தொடரில் வைத்துக் கொள்ளலாம்.எனவே, சிரங்குவிவார் என்பதற்கு வேறு பொருள் கொள்ளுதல் வேண்டும்.

'கவிசெந்தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவல் '

என்ற செய்யுட் பகுதியில் குவிபுறம் என்றது தாழியினது வளைந்த புறத்தை ஆதலின் குவிதல் என்பது வளைதல் என்ற பொருளைத் தருதல் பெறப்படும்.எனவே சிரங்குவிவார் என்பதற்குத் தலைவளைவோர் அதாவது தலை வணங்குவோர் என்று பொருள் கொள்ளலாம்.

தலைபணிந்தோரைத் தலைநிமிரச் செய்வான் இறைவன்.

'இறுமாந்திருப்பன் கொலோ ஈசன்பல்கணத் தெண்ணப்பட்டிச்
சிறுமான் ஏந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங் கிறுமாந்திருப்பன்கொலோ '

என்றருளினார் அப்பரடிகளும். 'ஒருநீயாகித் தோன்ற' என்றது திருமுருகாற்றுப்படை.

'சைவநீதி' ஈசுர ஆவணி 1997.


Thursday 15 November 2012

நாடகம்

 மாணிக்கவாசகசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நாடகத்தால் உன்னடியார் எனத் தொடங்கும் திருப்பாடலிலலமைந்த நாடகம் என்ற சொல்லுக்கு முத்தமிழில் ஒன்றாய நாடகம் என்பதுணர்த்தும் பொருளைப் பொருளாகக் கொண்டு உரை கூறப்படுகின்றது.அங்ஙனம் உரை கூறப்படுவது பொருத்தம் போற்காணப்படவில்லை.

அவ்வுரைக்கு, நாடகத்தால் என்பது நடித்து என்பதனைக் கொண்டு முடிவதாகக் கொள்ளல் வேண்டும்.நாடகத்தால் நடித்து என்பது நடையால் நடந்து என்பது போலப் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.மேலும் நடித்து என்ற சொல்லே அப்பொருளைத் தருதலால், நாடகத்தால் என்பது அங்கு வேண்டாத சொல்லாகக் காணப்படுகிறது.

நாடகத்தால் உன்னடியார் என்ற தொடரை, நாடு,அகத்தால்,உன் அடியார் எனப்   பிரித்து, நாடு அகம்,உன்னடியார் என்பவற்றை வினைத்தொகைகளாகக் கொண்டு,அவற்றை நாடுகின்ற அகத்தால், உன்னுகின்ற அடியார் என விரித்து,விரும்புகின்ற மனத்தினாலே,இறைவனை நினைக்கின்ற அடியவர் எனப் பொருள் கொள்ளலாம். அங்ஙனம் கொண்டால்,மெய்யடியவர் இலக்கணம் பெறப்பட்டு,அம்மெய்யடியவர் போல் நடித்து என்றியைந்து பொருள் சிறக்கும்.

இறைவனை விரும்புவதும் அவனையே இடையறாது நினைந்திருத்தலும் மெய்யடியார் இயல்பென்பது
திருவருட்பாக்கள் தோறும் பரந்து காணப்படும்.ஆன்மா எதனை நெடிது நினைக்கின்றதோ அதன் வண்ணமாகும் என்பது அறிஞர் கருத்து.

மெய்யடியாராகிய மாணிக்கவாசக சுவாமிகள்,தம்மை மெய்யடியார் போல நடிப்பவராக இழித்துக் கூறியது அவர்தம் ஆணவமற்ற இயல்பைக் காட்டி அவர்தம் உயர்வைப் புலப்படுத்துகிறது.இங்ஙனமே
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்பன முதலியவாகப் பிற இடங்களிலும் கூறுவது காணத்தக்கது.

'சைவநீதி' ஈசுர ஆனி 1997

அந்தணன்

சைவர்கள் இறைவனின் பெயரை மக்களுக்கு இட்டு வழங்குவதுண்டு.அது ஒன்றன் பெயர் மற்றொன்றற்காதல் நோக்கி ஆகுபெயருள் அடக்கிக் கொள்ளப்படும்.ஆயின்,மக்களின் பெயரை இறைவனுக்காக்கி வழங்குவதில்லை;வழங்கவும் கூடாது.

அந்தணன் என்ற சொல் ஒரு சாதிப் பெயராக வழங்குகின்றது.திருவள்ளுவநாயனார், அறவாழி அந்தணன் என அதனை இறைவனின் பெயராக வழங்குகின்றார்.ஆதலின்,இவ்விடத்தும் அந்தணன் என்ற சொல்லை இறைவனின் பெயராகக் கொண்டு சாதிக்கு ஆகுபெயராகக் கொள்வதே பொருத்தமானது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

என்ற குறளில் (30) திருவள்ளுவநாயனார்,அந்தணர் என்ற சொல்லை,தண்மையுடைமையால்  வந்த காரணப் பெயராகக் கொள்ளுகின்றார்.அறவோரே,தண்மையுடையராதல் கூடுமாதலின்,அறவோரே அந்தணர் எனப்படுவார்.

அறத்தை உரைத்த முதல்நூல் ஆசிரியனும் அறச்சமுத்திரமுமாகிய இறைவனே அந்தணன் எனப்படுவான்.இலக்கணத்தில்,இறைவனே முதல்நூல் ஆசிரியன்.அவன் வழிப்பட்ட பிறரும் முதல்நூல் ஆசிரியர் ஆவார் என்று கொள்ளுமாறு போல,அறமுணர்ந்து இறைவன் அருள்வழிபட்ட ஏனையோரும் அந்தணர் எனப்படலாம்.

மேற்கூறியவற்றால், அந்தணன் என்ற சொல் காரணஇடுகுறிப் பெயராய் இறைவனையும், காரணப் பெயராய் ஏனையோரையும் உணர்த்துமென்று கொள்ளலாம்.அந்தணர்க்கு மக்களாயினரையும், அவர்கள் அந்தண ஒழுக்கம் அற்றவராயினும்,அந்தணர் என்று வழங்குவதுண்டு. அவ்விடத்து அந்தணன் என்ற சொல்லை இடுகுறிப் பெயரளவில் கொள்ளுவதே பொருந்துவதாகும்.

'சைவநீதி' ஈசுர வைகாசி 1997.

காதல்

நளமகாராசன், புட்கரனுடைய கேள்விக்கியைந்து சூதாடமுற்பட்ட போது, நளனுடைய மந்திரிமார் சூதாடல் கூடாது என்று அவனுக்குப் புத்திமதி கூறினர்.அவர்களின் புத்திமதிகளில் ஒன்றாக அமைவது;

காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்தல் இவைகண்டாய் -போதில்
சினையாமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி

என்னும் இப்பாடல்.இதில் ஐந்து பெரிய பாவங்கள் கூறப்படுகின்றன.அவற்றில் ஓன்று காதல் என்று கூறப்படுகின்றது.புனிதமான அக்காதல் என்பதனைப் பாவங்களில் ஒன்றாகக் கூறல் பொருந்தாது எனக்கருதும் உரைகாரர்கள் அது காமத்தைக் குறிக்கின்றது என்று கருதிப் போலும் அதற்குப் பெண்ணாசை என்று பொருள் கூறுகின்றனர்.

புகழேந்திப்புலவர் அப்பொருளைக் கருதியிருந்தால் காமங்கவறாடல் என்று பாடியிருக்கலாமே.ஆதலால் அவர் காதல் என்பதற்கு வேறு பொருள் கருதினார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.அவர் எப்பொருளைக் கருதியிருப்பார் எனோது பற்றிச் சிந்திப்போம்.

நச்சினார்க்கினியார் தொல்காப்பிய எழுத்ததிகார உரையில் காது என்ற சொல்,கொல் என்னும் பொருளில் வரும் என்று கூறியிருக்கின்றார்.காது என்னும் வினையடி தல் என்னும் தொழிற்பெயர் விகுதி கொள்ளும் போது காதுதல் என்றும் அல் என்னும் விகுதி கொள்ளும் போது காதல் என்றும் வரும்.எனவே அச்சொலிற்குக் கொலை என்ற பொருளும் உண்டு என்பது விளங்குகிறது.புகழேந்தியார் அச்சொல்லிற்குக் கொலை என்றே பொருள் கொண்டார் என்பது தெளிவாகிறது.

இலக்கியத்தும் அச்சொல் கொலை என்ற பொருளில் வந்திருக்கிறது.காது மத மாகரத்த யானை என வருதல் காண்க. இச் செய்யுட் பகுதிக்கு 'கொல்லுகின்ற மதத்தினையும் பெரிய கையினையும் உடைய யானை' என்றே பொருள் கொள்ளப்படுகின்றது.

இனி, அப்பொருளைக் கொண்டேயாக வேண்டுமென்பதற்கும் காரணமுண்டு.
கொலைமிகப் பெரிய பாவம் என்பது திருவள்ளுவர் முதலிய பெரியவர்களின் கருத்து.
பஞ்சமா பாதகங்களை வெவ்வேறு வகையாகக் கூறுகின்றவர்கள் யாவரும் கொலையை அப்பாதகங்களில் ஒன்றாகக் கூறுவதில் தவறில்லை. கொலை, களவு, கள், காமம், சூது எனக் கொலையை முன் வைத்து எண்ணுதல் காண்க. புகழேந்தியாரும் கொலையை முன் வைத்தெண்ணினார் என்று கொள்ளல் மிகப் பொருத்தமேயாகும்.




Tuesday 6 November 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 7

தொல்காப்பிய உரைக் குறிப்புகள் எழுதுங் காலத்திலும் பிற ஆராய்சிகள் செய்யுங் காலத்திலும் ஏற்பட்ட தடைகள் பற்றி எங்களோடும் கலந்து பேசுவார்கள்.தடைசிறிதெனினும் அதற்கு முடிவுகாணாது அமையமாட்டார்கள்.சில நாள்களில் அதிகாலையே எங்களைச் சந்தித்து 'நேற்றைய சிக்கலை விநாயகன் இராத்திரித் தீர்த்து வைத்துவிட்டான்"என்பார்கள்.அவ்வளவுக்கு அவர்களிடம் விநாயகனிடத்து நம்பிக்கை இருந்தது.

மருதடி விநாயகர் பிரபந்தத்தை ஆறுதலாக நோக்குவோர்க்கு ஐயரவர்களின் உள்ளம் எங்கே நின்றதென்பது விளங்காமற் போகாது.மருதடி விநாயகர் பிரபந்தத்தின் உட்பிரிவாகிய மருதடி விநாயகர் அந்தாதியில்,

'அறியாமை நீக்குறுங் கல்வியென் றெண்ணி அலைவுற்றயான்
சிறியார்கள் செய்த மணற்சோ றதுவெனத் தேர்ந்து கொண்டேன்
செறியா மலர்சேர் மருதடித் தேவநின் சேவடியே
அறியாமை தன்னை அகற்றுவ தென்ப தறிந்தபின்னே'

என ஐயர் அவர்கள் பாடியது அவர்களது அனுபவத்திற் கண்ட உண்மையினையே என்பதை அறிந்தார் அறிவர்.பொன்னாடை போர்த்தல்,பொற்கிழி வழங்கல்,பட்டம் அளித்தல் என்பவைகளுக்கு ஐயரவர்களை ஒருப்படுத்தி அழைத்துச் செல்வதில் தாங்கள்பட்ட கஷ்டங்களை அவற்றிலீடுபட்ட பெரியார்கள் வாயிலாகப் பிறரும் அறிவர்.

அக்காலத்தில் அதிகாரம் படைத்த அரச உத்தியோகத்தில் இருந்த பெரியார் ஒருவர் ஐயரவர்களுக்கு அரசினர் மாதம் மாதம் சன்மானமாகப் பணம் வழங்கு வதற்கேற்ற ஒழுங்குகள் செய்துவிட்டு ஐயரவர்களின் சம்மதத்தைப் பெறுவதற்குத் தாம் நேரே சென்று பேச அஞ்சி,பிற பெரியோர்களை விட்டுப் பேசுவித்ததை நாங்களும் அறிவோம்.

இங்ஙனம் எப்பற்றுமற்று அறக்கனிந்த கனியாக விளங்கிய ஐயரவர்கள் தம தமது எண்பத்தொன்றாவது வயதில் ஆங்கில வருடம் 1958க்குச் சரியான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 23ம் நாள் (08.11.1958) சனிக்கிழமை காலை ஆறுமணியளவில் தமது ஆசிரமத்தில் சட்டென உடலை விட்டு எம்பெருமான் திருவடிநீழல் சென்றெய்தினர்.நட்சத்திரம்:உத்தரம்,திதி:அபரத் துவாதசி.

பெரும் பொருளும் புகழும் பூசனையும் பெறத்தக்க ஆற்றல்,தகுதிகள் இருந்தும் அவை தம்மைத் தேடிவந்தும் அவற்றை விரும்பாது இறைவன் திருவருட்பேறொன்றே கருதி வாழ்ந்த ஐயரவர்களைத் தமிழுலகம் தமிழ்முனிவர் எனப் போற்றுகின்றது.அவர்களது நிழற்படமும் அது தக்கதெனப் பறைசாற்றுகின்றது.ஐயரவர்களின் வாழ்க்கை வரலாறு எனையோருக்கு வழி காட்டுவதாக.

முற்றும்.

தமிழ்மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக்குழு, மகாஜனாக் கல்லுரி,தெல்லிப்பழை,1977.

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 6

இந்நாளில் பண்டிதர்கள்,வித்துவான்கள்,புலவர்களாக விளன்குபவரிற் பலர் ஐயரவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர்.ஆசிரிய கலாசாலைகள்,பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும்,மாணவர்களும் எனிட கல்விமான்களும் இடையிடை ஐயரவர்களைச் சந்தித்துத் தமக்கேற்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு.நாள்தோறும் மாலைவேளையில் முருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர்.மாணவர் சித்திரப்  பாவையின் அத்தகவடங்கி  இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயரவர்கள்.பராக்குப்பார்த்தல்,சிரித்தல்,வீண்கதை பேசல்,தொடர்பில்லாத வினாக்களை வினவல்,சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள்.சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள்.அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங்கேட்பார்.தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள்.அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்கனமே செய்வர்.இலக்கண நூல்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்டுவார்கள்.சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்மறந்து புகழுவார்கள்.பல நூற்பயிற்சியும்,நுண்ணறிவும் கொண்ட ஐயரவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர்.மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள்.சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மானவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்து போகாது அப்பனத்தினும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள்.

கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள்.'உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென் றுணருமாசெய' எனவரும் பாடலை எடுத்துக் காட்டி "இறைவனை வணங்கு,அவர் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன்" என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும்.ஆசிரிய இலக்கணம் பலவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்.

துறவுநிலை ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பற்று நீங்காத ஐயரவகளுக்குப் பிற்காலத்தில் அப்பற்றும் நீங்குவதாயிற்று.முன் பொருட்பற்று நீங்கியிருந்தார் என்பது மனவியிறந்தபின் தமது சொத்துக்களை இனத்தவருள் உரினையாலர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு,மருதடி ஆலய மருங்கில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்தார் என்பதனாற் காட்டப்பட்டது.மேலும்,பொற்கிழி வழங்கப்பட்டபோது அப்பணத்தை ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயம்,வருத்தளைவிளான் மருதடி விநாயகர் ஆலயம் என்பவற்றின் திருப்பணிக்காகச் செலவு செய்தார் என்பது பலரறிந்தது,தமக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடையைப் போர்க்கப்பட்ட அந்நேரத்தன்றிப் பின் ஒருபோதும் அணிந்திலர்;தம்மினத்தவர் ஒருவருக்கே வழங்கிவிட்டனர்.தேவைக்கு மிஞ்சிப் பணம் வைத்திருந்தறியார்.ஊரிலும் பிற ஊர்களிலும் ஐயரவர்களுக்குப் பொருள் வழங்கப் பலர் இருந்தனர்.அவர்கள் பணம் வழங்க முற்படும்போது "இருக்கட்டும் தேவையானபோது கேட்டுப் பெற்றுக் கொள்கிறேன்"என்பார்கள்.தேவைக்கு அவர் கேட்டுப் பெற்றதும் உண்டு.பணங்கருதிப் படிப்பித்தார் அல்லர் என்பதும் முன் காட்டப்பட்டது.சிவபூசை செய்தன்றி உணவு கொள்ளாத ஐயரவர்கள் ஓய்வு நேரங்களிலெல்லாம் மருதடி விநாயகர் ஆலயத்தைப் பிரதட்சணம் செய்து வணங்குவார்கள்.விநாயகர் முன்னிலையில் தியானத்தில் இருப்பார்கள்.நடுச்சாமத்திலும் ஐயரவர்கள் தியானத்தில் இருப்பதைக் கண்டவர் எம்மூறிற் பலர்.

Monday 5 November 2012

வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி.கணேசையா-பாகம் 5

விழா நிகழ்ந்த இடம் வைத்தீஸ்வர வித்தியாலயம்.அறிஞர் பலரும் பிரபுக்களும் பெருந்திரளாகக் கூடிப்      பலவகையான சிறப்புகளோடும் ஐயரவர்களை வண்ணைச் சிவன்கோயிலிலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அக்காலத்தில் அரசாங்க சபைத் தலைவராக விளங்கிய கௌரவ சேர் . வை.துரைசுவாமி, வண.ஞானப்பிரகாசர்,பண்டிதர்.ம.வே..மகாலிங்கசிவம்,வியாகரண மகோபாத்தியார் பிரமஸ்ரீ வை.இராமசுவாமி சர்மா,பகுதி வித்தியாதரிசி முகாந்திரம்,எஸ்.கந்தையா முதலாய பெரியோர்கள் வீற்றிருந்த அலங்காரமிக்க மேடையில் ஐயரவர்கள் நடுநாயகமாக இருத்தப்பட்டனர்.அறிஞர் பலரும் ஐயரவர்களின் ஆற்றலையும் தொண்டையும் குணநலன்களையும் வியந்து பேசி 2000 ரூபாய் கொண்ட பொற்கிழியையும் பரிசாக வழங்கினர்.இதுபோன்றதொரு கௌரவ விழா யாழ்பாணத்தில் இதற்கு முன்பும் பின் இன்று வரையும் நிகழ்ந்ததில்லை.

1951ம் ஆண்டு சித்திரை மாதத்திலும் ஐயரவர்களுக்கு ஒரு பெருங் கெளரவம் அளிக்கப்பட்டது.சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்த தமிழ் விழாவில் நான்காவது விழா யாழ் பரமேசுவரக் கல்லூரி முன்றலில் 29.04.1951 தொடங்கி 01.05.1951 முடியவுள்ள மூன்று நாள்களிலும் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.தென்னிந்தியாவிற் பல இடங்களிலிருந்தும் இலங்கையிற் பல பாகங்களிலிருந்தும் புலவர்பெருமக்கள் ஒன்று கூடி அவ்விழாவை நடாத்தினர். அவ்விழாவிற் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,சொல்லின் செல்வர் R.P .சேதுப்பிள்ளை,சுதேசமித்திரன் பத்திராதிபர் C.R.ஸ்ரீநிவாசன்,கௌரவ மந்திரி சு.நடேசபிள்ளை,விஞ்ஞான நிபுணர் DR.K.S.கிருஷ்ணன் F.R.S ஆகியோரும் பிறரும் தலைமை தாங்கியும் சொற்பெருக்காற்றியும் பங்கு கொண்டனர்.விழா இறுதி நாளன்று ஐயரவர்களை வலிந்தழைத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். தமிழகத்துச் சான்றோர் பலரும் கூடியிருந்த பேரவையில் உலகப் புகழ்பெற்ற பௌதிக விஞ்ஞான மேதை DR.K.S .கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி ஐயரவர்களைக் கௌரவித்தார்கள்.இக்கௌரவம் மற்றெப் புலவருக்கும் கிட்டாத கௌரவமாகும்.
பகுதி வித்தியாதரிசியாகச் சேவையாற்றிக் காலஞ்சென்ற யா.தி.சதாசிவ ஐயர் அவர்களின் பெருமுயற்சியால் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கப் பண்டித,பால பண்டித,பிரவேச பண்டித பரீட்சைகளுக்குத் தோன்றுவோருக்கு உதவியாகத் தாபிக்கப்பட்ட பிராசீன பாடசாலையிலே ஐயரவர்கள் பல ஆண்டுகாலம் கல்வி கற்பித்தவர்கள்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராலும்,யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாராலும் ஆண்டுதோறும் நாடாத்தப்பட்டு வந்த பரீட்சைகளில் பரீட்சகராகவும் தொண்டாற்றி வந்தார்கள்.ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் 29வது ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம் கார்த்திகை மாதம் 16ம் நாள்(01.12.1952) கொண்டாடப்பட்டது.அவ்விழாவில்,முன்னும் பின்னும் நிகழ்த்தப்படாத பட்டமளிப்பு வைபவமொன்றும் நிகழ்ந்தது.அவ்வைபவத்தில் ஐயரவர்கள் வித்துவ சிரோமணி என்னும் பட்டமளித்துக் கௌரவிக்கப் பட்டார்கள்.இன்றுவரை அச்சங்கத்தால் வித்துவசிரோமணி எனப் பட்டம் அளிக்கப்பட்டவர் பிறிதொருமிலர்.
இங்ஙனம் பலவித சிறப்புகளையும் பெற்ற வித்துவசிரோமணியாக விளங்கினாரேனும் ஐயரவர்கள் ஒருபோதும் தற்பெருமை கொண்டதில்லை.சாதாரண ஒரு அந்தணர் போலவே பொதுமக்களோடு பழகிவந்தனர்.நல்லநாள் அறிதல்,மழை வருதல்-வராமையறிதல்,வீடு-கிணறுகளுக்கு நிலம் வகுத்தல்,நினைத்த காரியம் கேட்டல்,ஐயந்தீர்த்தல் என்பவற்றுக்காக ஐயரவர்களோடு பொதுமக்கள் பெரிதும் பழகிவந்தனர்.அவரது தூய தோற்றமும் நல்லொழுக்கமும் மக்களை அவர்பால் மதிப்புக் கொள்ளச் செய்தன.அவர்கள் தேகவியோகம் எய்தியபோது பொதுமக்கள் காட்டிய துக்கம் ஐயரவர்களிடத்து அம்மக்கள் கொண்ட பெருமதிப்பைக் காட்டியது.
பிற் காலத்தில் ஐயரவர்கள் வருத்தலைவிளானில் சனி,ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும்,சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும்,தருக்கசங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள்.