Thursday 25 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 4

இங்ஙனம்  அறிஞர்களின் மதிப்பைப் பெற்ற ஐயரவர்கள்,ஆராய்சிகளும்,கண்டனங்களும் எழுதுவதில் மாத்திரமின்றி,இலக்கியங்களுக்கு உரைகாண்டலிலும், இனிய வசன இலக்கியங்களை ஆக்குவதிலும்,செய்யுள் யாத்தலிலும் வல்லவராய்த் திகழ்ந்தனர். கம்பருக்கு நிகராகக் காவியஞ் செய்வேன் என்று புகுந்து,கற்றுத் தெளிந்தவர்க்கும் உரைகாண்டற்கரிய, யாழ்பாணத்து அரசகேசரி என்ற பெரும் புலவர் ஆக்கிய இரகுவம்சம் என்னும் நூலுக்கு ஐயர் அவர்கள் ஆக்கிய உரை அவர்களின் பரந்த இலக்கிய அறிவையும்,நுணுகிய இலக்கண அறிவையும்,செய்யுட் சுவையுணர்வையும்  புலப்படுத்தும்.அவ்வுரை ஒட்ப,திட்ப,நுட்பம் பொருந்தியதெனப் போற்றப்பட்டது. இன்னும் அகநானூற்றின் முதல் நூறு செய்யுள்களுக்கும்,நாணிக் கண் புதைத்தல் என்ற ஒருதுறைக் கோவைக்கும் சிறந்த உரை கண்டிருக்கின்றார்கள்.
குசேலர் சரித்திரம்,குமாரசுவாமிப் புலவர் வரலாறு,ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் என்னும் வசன நூல்களும் செய்திருக்கிறார்கள்.அவ்வசன நூல்களின்கண் அமைந்த வசனங்களை நோக்குவோர் இலகுவும் தெளிவும் பொருந்திய அவ்வசனங்கள்,இறுகிய நடையில் கண்டனங்களும் ஆராய்சிக் கட்டுரைகளும் எழுதிய ஐயர் அவர்களின் வசனங்கள் தானோ என்று ஐயுறுவர்.வருத்தலைவிளான்  மருதடி விநாயகர் பிரபந்தம் ஐயர் அவர்களாற் பாடப்பட்டது.அதன்கண் பலவகைச் செய்யுள்கள் அமைந்திருக்கின்றன.அவை ஐயர் அவர்களின் செய்யுள் ஆக்கும் திறனைக் காட்டுவன.இன்னும் பல ஆலயங்களுக்கு ஊஞ்சற் பாக்களும்,நூல்கள் வெளியீடுகளுக்கு வாழ்த்துக் கவிகளும் பாடியிருக்கின்றனர்.
இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களில் மிகத்தொன்மையானது தொல்காப்பியமென்னும்  இலக்கண நூல்.அது தமிழர்களின் நாகரிக பழக்க வழக்க ஓழுங்குகளை ஆராய்வார்க்கு உருதுனைபயக்க வல்லதோர் சீரிய நூல்.அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன.அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்து விட்டன.ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக்காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும்,விளங்குதற் கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன.அவற்றைச் செம்மைசெய்து பாதுகாக்க வேண்டுமென ஐயரவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று.அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்கு அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதிற் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கிப் பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர்.தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர்.இறுதியாக,விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர்.அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா.பொன்னையா அவர்களாகும்.அந்நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும்,மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு,ஐயரவர்களின் குறிப்புகள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்.
பண்டிதர் என்றும் வித்துவான் என்றும் மகா வித்துவான் என்றும் அறிஞர்களாற் சிரபிக்கப் பெற்ற ஐயரவர்களின் ஆற்றலையும் அவர்களின் தொண்டுச் சிறப்பையும் கற்றாரேயன்றி மற்றோர் பெரிதும் அறிந்திலர்.பல பெரியோர் சேர்ந்து ஐயரவர்களின் அறுபதாண்டுப் பூர்த்தி விழா நிகழ்த்தி அவர்களுக்குப் பொற்கிழி அளித்த காலத்திலிருந்தே மற்றோரும் அவர்களின் பெருமையை அறிந்தனர்.ஈழகேசரிப் பத்திராதிபர் நா.பொன்னையா,பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை,கலைப்புலவர்  க.நவரத்தினம்,அதிபர் ச.அம்பிகைபாகன் முதலாய பெரியோர்களின் இடைவிடாத முயற்சியால் இவ்விழா எடுக்கப்பட்டது.இது நிகழ்ந்தது வெகுதானிய ஆண்டு புரட்டாதி மாதம் 22ஆம் (08.10.1933) ஆகும்.

Tuesday 16 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையா-பாகம் 3

ஐயர் அவர்கள் தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய உருவும் திருவும் நிறைந்த அன்னலட்சுமி அம்மையைத் திருமணம் செய்தவர்.அம்மையாரும் வடமொழி தென்மொழி அறிவுடையவர்.நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர்.இல்லற வாழ்கையின் பயனாக அவர்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைத்திலது.மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூபம் எ எனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாசனம் பண்ணியிருக்கிறார்கள்.அவ்வாலயத்துக்கு,முன்னே பலர்,பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் அவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீருற்றிலது. ஐயரவர்கள்,

ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை -நாட்டிடுவாய்
மாமருதி லீசா மதமா முகத்தோனே
காமுறுவேற் குள்ளம் கனிந்து

என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி,தம்பணியைத் தொடர்ந்து செய்து நீருறக்கண்டு மகிழ்ந்தனர்.அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளது.ஏனைய சொத்துகளையும் ஐயர் அவர்கள் தம்மினத்தில் உரிமையாளருக்குக்  கையளித்து பொருட்பற்றினும் நீங்கி உள்ளத் துறவியாய்,மருதடி விநாயகர் ஆலயமருங்கில் ஓர் ஆசிரமம் அமைத்து அதில் வதிந்து,தமிழாராய்ச்சி செய்து கொண்டும்,விநாயகரை வழிபட்டுக் கொண்டும் வாழ்ந்தார்கள்.தேகவியோகமெய்தியதும் இவ்வாசிரமத்தின் கண்ணேயாம்.

துறவு வாழ்க்கை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் ஐயரவர்கள் தமிழ்ப்பற்றைத் துறந்தாரல்லர்.புலவரிடம் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் ஆற்றிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்கள்.ஆரம்ப காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு வந்த செந்தமிழ் என்ற சீரிய பத்திரிகையில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன.ஐயரவர்களின் பரந்த நூலறிவையும்,நுண்மதியையும் வெளிப்படுத்திப் பெரும்புகழ் ஈந்தன.அக்காலத்தில் தென்இந்தியாவில் பெரும் புலவர்களாக விளங்கிய சேது சமஸ்தானம் மகாவித்துவான் ரா.இராகவையங்கார்,மு.இராகவையங்கார்,நாராயணையங்கார் என்பவர்கள் ஐயரவர்களிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர்.அக்காலத்தில் அதி தீவிர விவேகமும் நுண்மாண் நுழைபுலமும் பெற்று,பண்டைய நூலாசிரியர் உரையாசிரியர்களின் கருத்துக்களை மறுத்து,தம்மை மறுப்பார் கருத்துக்களையெல்லாம் வழிகெடுத்து நவீன உரை கூறும் திறம்படைத்து,தொல்காப்பியத்தின் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் 'சண்முக விருத்தி' என்னும் பெயரில் புத்துரைகண்ட சோழ வந்தான் வித்துவான் அரசன் சன்முகனாருக்கும் ஐயரவர்களுக்கும் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு தோன்றிற்று.
அரசன் சண்முகனார், ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் வேறு என்றும்,ஐயரவர்கள் அவையிரண்டும் ஒன்றென்றும் வாதிட்டனர். அவர்களது வாதங்கள்,'செந்தமிழ்'பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமாயின.அவை பேரறிஞர்களின் கருத்தைக் கவர்ந்தன.ஈற்றில் ஐயரவர்களின் கருத்தே தக்கதென்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அவ்வாத முடிவு அவர்களுக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது.சென்னை அருள் நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது.கவியின்பம்,ஒரு செய்யுட் பொருளாராய் ச்சி,நச்சினர்க்கினியார் உரைநயம்,இராமாயணச் செய்யுட் பாடாந்தரம்,அளபெடை,போலி எழுத்து,தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி,பிறிது பிறிதேற்றல்,ஆறனுருபு பிறிதேற்றல்,இருபெயரெட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும்,தொகை நிலை,சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.

Monday 15 October 2012

கல்வியும் ஒழுக்கமும்-பாகம் 2

செல்வம் என்பதும் அது அறிவினுடாக ஒழுக்கத்தைத் தரும் என்பதும்,ஒழுக்கத்தைத் தராத கல்வியாற் பயனின்ெனன்பதும், அவ்வொழுக்கம் இம்மை,அம்மை,முறுமை என்னும் மும்மையும் தரும் முறையுடைத்து என்பதும் இச்சிறிய கட்டுரையில் ஒருவாறு காட்டப்படுகின்றன.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்து
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவங்கட் படுமே.  (புறநானூறு-183)

முற்றும்.



Sunday 14 October 2012

வித்துவசிரோமணி பிரம்மஸ்ரீ சி.கணேசையர் -பாகம் 2

அவர்கள் பரீட்சிக்கும் போது ஐயர் அவர்களிடம் 'திகழ்தசக்கரச் செம்முகம் ஐந்துளான் ' என்ற, கந்தபுராணக் காப்புச் செய்யுளின் பகுதிக்குப் பொருள் சொல்லுமாறு கேட்டனர். ஐயர் அவர்கள் தாம் முன்னே கற்றுக் கொண்டபடி,"விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களையும் செவ்விய ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபிரான்" எனலும்,வித்துவசிரோமணி இடைமறித்து உடைமைப் பொருளுக்கன்றி  உண்மைப் பொருளுக்கு ஐ உருபை விரிக்கக் கூடாது என்ற இலக்கான நுட்பத்தை  எடுத்துக் காட்டி "விளங்கா நின்ற பத்துத் திருக்கரங்களும்,செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபிரான்"என்று உரைத்தல் வேண்டும் என்றனர்.அவருடைய மதிநுட்பத்தைக் கண்ட ஐயருக்கு அவரிடம் பாடங்கேட்க வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று.அதனால் மாணவ ஆசிரியப் பயிற்சி  பெறவேண்டுமென்ற பெற்றாரின் ஆசையை அவரால் நிறைவேற்றமுடியாது போயிற்று.கல்வியின்மேல் மகன் கொண்ட ஆர்வத்தையறிந்த பெற்றோர் தம்ஆசையை விட்டு வித்துவசிரோமணியிடம் படித்தற்கேற்ற ஒழுங்குகளைச் செய்தனர்.
வண்ணார்பண்ணைச் சிவன் கோவிற் பிரகாரத்தில் வாசித்த தமது தமக்கையாரின் வீட்டில் தங்கி ஐயரவர்கள் அவ்வூரில் வித்துவசிரோமணியால் நட்டாத்தப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடத்திற் கல்வி கற்று வந்தனர்.ஐயரவர்களின் மதிநுட்பத்தையும் கல்வியின்மேலுள்ள ஆசையையும் கண்ட வித்துவசிரோன்மணிக்கு ஐயர் அவர்களின்மேல் அன்பு வளர்வதாயிற்று. உயர்ந்த இலக்கண இலக்கியங்களைத் திண்ணைப் பள்ளியில் கற்றதோடமையாது புராணோதிகாசங்களுக்குப் பொருளுரைத்தற் பொருட்டு வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் தாமும் சென்று, அவர் கூறும் அரிய பொருள்களையும், கவிநயங்களையும்  குறித்துக் கொள்ளுவார் ஐயர் அவர்கள். தந்தையாருக்கு ஆலயத்தில் உதவிசெய்தற் பொருட்டு, புன்னாலைக் கட்டுவனில் தாம் தங்கவேண்டிய காலங்களிற்கூட ஐயர் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்று திரும்புவதில் தமக்கேற்படும் கஸ்டத்தை நோக்கினாரல்லர்.வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் சென்று,கல்வியே கருத்தாகக் கற்றுவந்தார்கள்.வித்துவசிரோமணி சிவனடி எய்தியதும் ஐயர் அவர்கள் கல்விக்குக் களை கண்காணாது திகைத்தார்கள்.

தம் விருப்பினை நிறைவேற்ற வல்லவர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்களே எனத் தேறி அவரிடம் கற்கத் தொடங்கினார்கள். புலவர் வடமொழி தென்மொழிகளில் நிரம்பிய பாண்டித்தியம் உள்ளவர்;இலக்கண ஆராய்ச்சி மிக்கவர்;சொற்பொருள் விளக்கம் மிக்கவர்;தருக்கம் வல்லவர்;பொய்ப்பொருளைக் களைந்து மெய்ப்பொருளை நாட்டும் திறனுள்ளவர்;அதனால்,கண்டனப்  புலியாக விளங்கியவர்.புலவரின் தொடர்பால் ஐயர் அவர்கட்கு வடமொழியறிவும் தருக்க அறிவும் மிகுவன ஆயின.ஆராய்ச்சித் திறன் உறுவத்தாயிற்று.புலவர் சிவனடிஎய்தும் வரை ஐயரவர்கள் அவரின் தொடர்பை விட்டாரால்லர். புலவரின் தூண்டுதலால் அவரின் உதவியுடன் ஐயரவர்கள் பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்யவும்.ஆராய்ச்சிகள் செய்யவும்,கண்ண்டனங்கள் வரையவும்,நூல்களுக்கு உரை செய்யவும் தொடங்கினார்கள்.

அதனால் ஐயரவர்களின் புலமை தமிழுலகிற்குப் புலனாகத் தொடங்கியது.புலவர் செய்த நன்றியை ஐயர் எக்காலத்தும் மறந்திலர். புலவர் வாழ்ந்த காலத்திலேயே ஐயரவர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இடைக்காலத்தில் மூன்றந்தர ஆசிரிய தராதரப் பத்திரமும் பெற்றிருந்தாராதலின் பாடசாலைகளில் தலைமைஆசிரியராகக் கடமையாற்றும் தகுதி அவர்களுக்கு இருந்தது.வண்ணார்பண்ணை,வயாவிளான்,தையிட்டி,
நயினாதீவு,
சுன்னாகம் பிராசீன பாடசாலை,வருத்தலை விளான் ஆகிய இடங்களில் படிப்பித்திருக்கிறார்கள்.அவர்களிடம் படித்து,வித்துவான்,பண்டிதர்,புலவர் என்ற பட்டங்களோடு விளங்குபவர் பலப்பலர்.உயர்ந்த இலக்கண இலக்கியங்களை நீண்டகாலமாகத் திரும்பத் திரும்பக் கற்பித்து வந்ததால் அவ்நூல்களில் நிரம்பிய ஆட்சிபெற்றிருந்ததே ஐயர் அவர்களின் ஆராய்சிச் சிறப்புக்குக் காரணமாயிற்று.

Saturday 13 October 2012

வித்துவசிரோமணி பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்-1

செந்தமிழ் வழங்கும் நிலமாகிய யாழ்ப்பாணம், அத்தமிழின் தாயகமாகிய தென்னிந்தியாவோடு பண்டைக்காலத்திலிருந்தே தமிழ்,சமயம் முதலியவற்றில் தொடர்புடையதாக இருந்து வருகிறது.
யாழ்பாணத்திலிருந்து சைவத்தமிழ் அறிஞர்கள் தென்னிந்தியா சென்றும், தென்னிந்தியாவிலிருந்து அத்தகையோர் யாழ்பாணம் வந்தும் சைவப் பணியும் தமிழ்ப் பணியும் புரிந்து வருகின்றனர்.
தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கிய கூழங்கைத் தம்பிரான் என்னும் பேரறிஞரின் மாணவ பரம்பரையில் வந்தவர்களிற் பலர் தென்னிந்தியா சென்று சைவப்பணியும்,தமிழ்ப்பணியும்
செய்திருக்கின்றனர். அவர்களின் மாணவ பரம்பரைகள் தென்னிந்தியாவில் இன்றும் உள.

நல்லைநகர் ஆறுமுகநாவலர், வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலப்பிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை,சபாபதிநாவலர்,அம்பலவாண நாவலர், மகா வித்துவான் நா,கதிரவே ற்பிள்ளை ,உரைஆசிரியர் ம.க.வேற்பிள்ளை, சுவாமிநாத பண்டிதர், செந்திநா தையர் முதலாகப் பலர் தென்னிந்தியா சென்று பணிபுரிந்து புகழ் நிறுவினார்கள். சுன்னாகம் அ .குமாரசாமிப்புலவர் முதலாகப் பலர் யாழ்பாணத்திலிருந்து கொண்டே தமது வித்துவத் திறமையால் தமிழ்நாடெங்கும் புகழ் பரப்பினார்கள். அவர்கள் வரிசையிற் பிற்காலத்தில் வைத்து மதிக்கப்படுபவர் வித்துவசிரோன்மணி பிரமஸ்ரீ சி.கணேசையர் அவர்கள்.

புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அர்ச்சக பரம்பரையில் வந்தவர் சின்னையா என்னும் அந்தணப் பெரியார். அவர் வினயகப்பெருமானிடத்து மிகுந்த பக்தி பூண்டவர்.தாம் பூசிக்கும் படிகலிங்கத்துகுப் பூசனை புரிந்தன்றி உணவு கொள்ளாத நியமம் பூண்டவர். அவ்விலிங்கத்தை நாள் தோறும் நூற்றெட்டுத்தரம் வீழ்ந்து வணங்கி எழும் வழக்கம் உள்ளவர்.இவ்வீடுபாட்டால் பொருட்செல்வப் பேறு குறைந்தவர். அவர் அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவரை விவாகஞ்செய்து  நால்வர் பெண்மக்களுக்குத் தந்தையாயினர். அதனாலேற்பட்ட வறுமையாலும் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையினாலும் அவருக்குண்டான கவலை அவரது கடவுள் பக்தியை மேலும் வளர்பதாயிற்று. ஆண்பிள்ளை வேண்டி விநாயகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்தனர். அதன் பயனாக ஆங்கில வருடம் 1878 இல் நிகழ்ந்த ஈசுர வருடம் பங்குனி மாதம் 15ம் நாள் செவ்வாய்கிழமை பிற்பகல் 1மணி 20நிமிசமளவில் பூராடம் 3ம் காலில் அவருக்கு ஓராண்மகவு பிறந்தது. விநாயகப்பெருமான் அருளாற் பிறந்தமையால் அம்மகவுக்குக் கணேசையர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மகவே பிற்காலத்தில் வித்துவசிரோமணி எனச் சிறப்பிக்கப்பட்ட பிரம்மஸ்ரீ கணேசையர்  ஆகும்.

அக்காலத்தில் சின்னையர் அவர்களின் தமயனாராகிய கதிர்காமையர் வடமொழி தென்மொழிகளிற் பாண்டித்தியம் பெற்றவராய் விநாயகர் ஆலய மருங்கில் பாடசாலை ஸ்தாபித்து அதில் கற்பித்து வந்தார்கள்.அப்பாடசாலையே இப்போது அரசினர் பாடசாலையாக விளங்குவது. ஐந்து வயதில் ஐயரவர்கள் அப்பாடசாலையில் வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றார்கள்.
எட்டாம் வகுப்பு முடிய அப்பாடசாலையில் கற்றார்கள்.அங்குநீதிநூல்கள்,அந்தாதிகள்,பிள்ளைத்தமிழ்கள்,
இலக்கணம்,நிகண்டு, புராண நூல்கள்,சரித்திரம்,சமயம்,கணிதம் என்பவற்றில் பயிற்சி பெற்றார்கள். அக்காலத்தில் எட்டாம் வகுப்புச் சித்தி எய்தினால் மாணவ ஆசிரியனாகப் பயிற்சி பெற்று ஆசிரியனாகக் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு  இருந்தது.வறுமை நிலையிலிருந்த பெற்றார்கள் ஐயர் அவர்கள் ஆசிரியனாகக் கடமை செய்தலை விரும்பி அதனை எதிர் நோக்கி இருந்தனர்.எட்டாம் வகுப்பைப் பரிசோதிக்க வித்துவசிரோமணி ந.ச.பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள் நல்லை. ஆறுமுகநாவலர் அவர்களின் மருகர்;நன்மாணாக்கர்;புரோணாதிசிகாசங்களுக்கு பொருள் சொல்வதில் தமிழ் நாட்டில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். (தொடரும்)


கல்வியும் ஒழுக்கமும்

மக்கள் வடிவு கொண்டவர்கள் யாவரும் மக்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படார். அவர்களுட் கல்வியுடையோரே மக்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். விலங்குப் பிறவியிலும் மக்கட்பிறவி  சிறந்ததென்பது யாவரும் அறிந்தது. அதுபோல கல்லாரினும் கற்றவர் சிறந்தவர் ஆவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

என்கிறது திருக்குறள்.

மக்களாற் பெறத்தக்கன நான்கு; அவை அறம் ,பொருள்,இன்பம்,வீடு என்பன.
அந் நான்கினையும் தருவது கல்வி.

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்று
உற்றுழியுங் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கிலைச்
சிற்றுயிர்க்  குற்ற துணை.

என்பர் குமரகுருபர சுவாமிகள்.

சிலவாகிய வாழ்நாளும் சிறிய அறிவும் பல்பிணியும் உடைய மக்களுக்குக்
கல்விபோற் சிறந்த துணை பிறதில்லை.

"கல்விக்குப் பயன் அறிவும் அறிவுக்குப்பயன் ஒழுக்கமும்" என்பர் பரிமேலழகர்.
அவ்வொழுக்கம் வீடுபேற்றுக்கும் வழி செய்யும். இதனைப் பரிமேலழகர்  பின்வருமாறு விளக்குவர்:
 தத்தம் வருணத்துக்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களில் வழுவாதொழுக அறம்  வளரும்.
அறம் வளரப் பாவம் தேயும். பாவம் தேய அறியாமை நீங்கும்.அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டுணர்வும் அழிதல் முதலாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற வீட்டின்கண் ஆசையுண்டாம். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம். அஃதுண்டாக மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யாெனன்பதும் விடும்" எனச் சொல்கின்றது அவர் விளக்கம்.

நெல்லுகிறைத்தநீர் நெல்லுக்குமாத்திரமின்றித் தான் செல்லும் வாய்க்காற் புல்லுக்கும் உதவுமாறுபோலக் கல்வியும் அதன்பயனாகிய ஒழுக்கமும் வீடு பேற்றுக்கு மாத்திரமன்றி இம்மைப்பேறு  பலவற்றுக்கும் காரணமாய் நிற்கும். பொருளும் புகழும் பூசனையும் தரும். குலத்தை உயர்த்தல், அரச மதிப்பும் பதவியும் தருதல், துன்பத்தை நீக்கல் என்பன முதலாக அவற்றின் பயன் நூல்களில் ஆங்காங்கே சொல்லப்படும். இனி, கல்வி கருவியும் ஒழுக்கம் பயனும் ஆதலின் இவ்விரண்டினுள் கல்வியிலும் ஒழுக்கமே சிறந்ததென்பர். ஒழுக்கம் தராத கல்வியாற் பயன் இல்லை.

ஆர்கலி  உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.

என்னும் முதுமொழிக்காஞ்சி. கற்க எனக் கூறிய வள்ளுவனார் கற்றால் அதற்குத்தக நிற்க என வற்புறுத்துவர்.
" கற்பன கற்றுக் கற்றாங் கொழுகுக".

"மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொளுக்கங் குன்றக் கெடும்"

"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

என்பன முதலாகப் பலவிடங்களில் ஒழுக்கத்தின் இன்றியமையாமை பேசப்படும். நல்லொழுக்கம்,  இம்மை மறுமையின்பங்களையும் தீயொழுக்கம் துன்பங்களையும் தரும் என்பது தெய்வப்புலமைத் திருவள்ளுவர் முதலிய பெரியோர் கருத்தாதலின் நன்மை விரும்பும் மக்கள், நல்லொழுக்கம் உடையவராதல் உலகில் நிலைபெற வழி செய்வது அரசன்,உபாத்தியாயன்,தாய், தந்தை, தம்முன் ஆகிய ஐங்குரவர்க்கும் கடனாகும். அரசன் என்பது அரசாங்க அதிகாரிகளையும், உபாத்தியாயன் என்பது  வித்யாகுரு, தீட்சகுரு,ஞானகுரு என்பவர்களையும் தம்முன் என்பது வயதுமிக்க பெரியவர்களையும் உணர்த்தும். இவ்வைங் குரவர்களையும் தேவரை ஒப்பக்கொண்டு தொழுதெழ வேண்டுமென்பது முந்தையோர் கண்ட முறையாகும்.

என்றிங்கனம் கூறிவற்றால் பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றவற்குக் கல்வியே இன்றியமையாத

"

Sunday 7 October 2012

சந்நிதிக் கந்தர் சதகம்

விநாயகர் வணக்கம்

சந்நிதிக் கந்தர் சதகத் தமிழ்செய்ய
மன்னு கருணை மழைபொழியும் - தன்னருமோர் 
கோட்டிற் கயமுகனைக் கொன்றுலகு காத்தவெழின்
மோட்டகட்டு வேத முதல்.

நூல்

மலையான் மகளார் மகனே மயிலா
அலைசேர் தருசந் நிதிவாழ் அழகா
நிலையா வுலகை நிலையென் றுணர்வேன்
அலையா வகைகாத் தருள்வோய் அரைசே.1

அரைசாய் அமரர்க் கமர்வோன் மகளைத்
தரையார் தருமத் தகைநன் றுணர்வான்
வரைவாய் குறவர் மகளைக் களவில்
விரைவாய் கவர்வாய் மறவா தருளே.2

அருளென் றுலகத் தவர்வந் தடியைப்
பரவும் படிசந் நிதியிற் பரவைக்
கருகிற் குடிகொள் அயில்வேல் அமரா
பெருகும் துயர் மெய்ப் பிணிபோக் குவையே.3

குவையார் பொருளே குறியாக் குறியா
நவைவாய் விழுமா றறியா நலமார்
அவையார் பயில்சந் நிதிசேர் அமலா
சிவைசேய் தருவாய் திருவிற் றிருவே.4

திருமால் மருகா திகழ்சந் நிதியில்
முருகா பவநோய் முடுகா வகைகாத்
தருளாய் சிவன்மா ணவனா யமரக்
குருவாய் அருள்வாய் குடிலைப் பொருளே.5

பொருளைப் புவியைப் புகழைக் கருதா
தருளைக் கருதித் துதிநின் அடியார்
இருளைக் களைதற் கெழுமுட் சுடரே
பொருளுட் பொருளாப் பொலிவெற் பிறையே.6

இறையே யெனினும் பசிவந் தியையா
நிறைவாழ் வளிசந் நிதியில் நிமலா
குறையா னவையுங் குணமென் றுகொளுன்
அறைநூ புரமெல் லடியெம் புகலே.7

புகலற் கமையாப் பொருணீ யெனினும்
அகநெக் குருகித் தொழுவார் அழுவார்
சுகமுற் றிடவுட் சுடர்வாய் அலையோ
பகவெற் பெறிவேல் பரிகைப் பரனே.8

பரனென் றயனோ டரியும் பரவும்
சரணன் சிவசங் கரியின் தநயன்
கரமைந் தமையெங் கரிபின் னவனல்
வரசந் நிதியில் வதிசண் முகனே.9

முகனா றுடையான் முழையிற் கீரன்
தகவார் தமிழிற் றனதா ளேத்த
மிகவா தரவாய் வெளிவந் தாண்ட
குகனைப் பரவக் கொடுநோய் போமே.10