Thursday 11 March 2021

நகுலேசர் திருவந்தாதி

 சங்கார் கரனயன் காணா நகுலா காணா சலமுதன்மேற்

பொங்கா தரத்தொடோர் அந்தாதி பாடியான் போற்றுதற்கு

மங்கா வளமார் வருத்தலைக் கண்மா மருதடியைத்

தங்கா லயமெனக் கொள்ளைங் கரத்தன் தருந்துணையே.


பூவா ரடிநகு லானனன் போற்றிப் புகழ்ந்துநித

மோவா தொழுகு மருவிநீ ராடி யுழைந்திடலு

மாவா வெனவரு ளான்முக மாற்று மவனிருக்கப்

போவா ரெவர்பிற தெய்வத்தை நாடிப் புறம்புறமே.  1


புறந்தருந் தன்கழல் போற்றுகின் றாரைப் பொருவரிய

அறந்தரு மர்த்தத் தொடுகல்வி யின்ப மளித்தருளும்

இறந்தருந் தீநர கெய்தாமை நல்கு மிமையவட்கோர்

புறந்தருஞ் சீர்நகு லாசலம் மேவிய புண்ணியனே.  2

புண்ணிய முன்னென்ன செய்தன மோவிப் புவிபரக்க

நண்ணிய தூயநற் றீர்த்தம தாடி நகுலமலை

யண்ணிய வண்ணலைத் தன்னிடம் மேவிய அம்மையொடும் 

பண்ணிய னற்றமி ழாற்றுதி பாடிப் பணிவதற்கே.  3


பணியா தெனவரி பங்கய னாதிப் பகவர்தனைப்

பணியா யெனநிதம் வேண்டினர் நிற்கப் பதைத்துருகிப்

பணியா பரணகண் பாரென வேண்டுமிப் பாரினரை

யணியா தரத்தி னருளுவ னானகு லாசனனே. 4


சலமில னாயினுந் தன்னினை வார்க்கித் தரணியின்கண்

இலமில மென்றுநை யாவகை யாவு மினிதளித்துச்

சலமில ராக்கிமெய்ஞ் ஞானம் பெறத்தடை தந்துநின்ற 

மலமில ராக்கும் நகுல மலையுறை வானவனே.5


வானம் வளிதீ புனல்மண் கதிரிய மானனிந்தைத்

தானங் கமாக்கி யகிலாண்ட மெங்குந் தரித்தவற்றை

யானந் தமாக வசைத்தவற் றுக்குவே றாகியுமெய்ஞ்

ஞானந் தவாநகு லேசனின் றாடுவன் நம்பொருட்டே.  6


பொருளைப் புகழினைப் பூவைய ரின்பினைப் போற்றிசெயு 

மிருளைப் புறங்கண் டியாமுனை நெஞ்சி லிருத்துதற்குன்

னருளைப் பெறுவதெந் நாளென்ன வேங்கி யலமந்தனந் 

தெருளைப் புரிதவர் சேர்நகு லாசலச் செவ்வண்ணனே.  7


வண்ணப் பிறைநதி யாடர வஞ்சேர் மணிச்சடையு

மெண்ணத் தகுநீ றணிமெய்யு மாரரு ளேய்கண்களும்

மண்ணப் படுமணி யன்னபொற் கண்டமும் வாய்ந்தெமுளம்

நண்ணப் புகும்நகு லாசலம் மேவிய நாயகனே.  8


நாயகன் தன்னிட மேவிய நங்கைக்கு நாம்புரிந்த 

தீயகன் மம்மெலாந் தீய்ந்திடச் செய்யுந் திறலுடையான்

போயகன் மேருவில் லாற்புர மூன்றும் பொடிசெய்தவன்

பாயகன் மாநகு லாசலன் சூலப் படைக்கரனே.9


படைப்பவன் பார்முத லண்டங்க ளெல்லாம் பரிந்தளித்துத் 

துடைப்பவன் தீவினை யாளரைத் துன்பங்கள் சூழ்நரகி 

லடைப்பவன் தான்சொலும் நூனெறி நின்றா ரருவினைக 

ளுடைப்பவன் தொன்னகு லாசலம் மேவி யுறையரனே.  10