Monday 29 March 2021

எங்குருவின் இணையடிகள் ஏத்தி வாழ்வாம்

 புன்னைநகர் வாழ்கின்ற பூசுரர்கள் தம்மரபிற்

   புனித ரான

சின்னையர் புரிதவத்தின் பயனாக அவதரித்த

   சேயாய் நல்லூர்

மன்னியபொன் னம்பலப்பேர் வித்வசிரோ மணிதனக்கும்

   வளமை சாலும்

சுன்னைவரு புலவர்மணி குமாரசுவா மிப்பிள்ளைத்

   தூயோனுக்கும்


நன்றியறி மாணவனாய் நற்றமிழும் வடமொழியும்

   நவின்ற நூல்கள்

தொன்றுதொடு வரன்முறையிற் றுகளறவாய்ந் தருள்நூலின்

   தொகையு மோதிக்

குன்றனைய திறனுடைய குருவாகி மாணவருட்

   கோட்ட நீக்கித்

துன்றுமதி மதிவித்வ சிரோமணியென் றுலகுபுகழ்

   சொல்ல நின்றான்.


தொல்காப் பியமுனிவன் சொன்னூலின் றுகடீர்த்துத்

   தூய்மை கண்டான்

வெல்காப் பியமான ராமவ தாரவியல்

   விளங்கச் செய்தான்

ஒல்காப் பொருளிரகு வமிசத்துக் கோரரிய

   உரையுங் கண்டான்

அல்காப் புகழகத்தின் முற்பகுதிக் கரியவுரை

   ஆக்கித் தந்தான்.


ஆறாகு வதனியல்பும் ஆகுபெய ரிலக்கணமும்

   முதலா ஆன்றோர்

வேறாக வுரைகண்ட பலவரிய விலக்கணத்தின்

   மெய்ம்மை நாடிப்

பாறாமை நிலைநாட்டிப் பண்டிதர்கள் முடிமணியாய்ப்

   பகர வாழ்ந்தான்

நீறாடி முதற்பிள்ளை நீங்காது தங்கநெகிழ்

   நெஞ்சந் தந்தான்.


தாமரையி னிலைநீர்போற் றாங்குலக பற்றின்றித்

   தவவாழ் வுற்று

மாமறைசொன் முதற்பொருளாம் மகேசுவரன் மலரடியே

   பற்றா மன்னிச்

சேமமுற வவ்வடிக்கட் சென்றடைந்தான் எங்குருவாய்த்

   திகழ்ந்து நின்ற

ஏமமுறு கணேசையன் இணையடியுள் ளிடையிருத்தி

   ஏத்தி வாழ்வாம்.


கணேசையர் நினைவுமலர், ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்

குரும்பசிட்டி, தெல்லிப்பழை. 1960 

பக்கம் 322-323