வைத்தாய் பெண்ணை
சபையிலே சமயம் பேசுகிறவர்கள் சமய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறுபாடு நேராமற் பேச வேண்டும்.
வேறு பேச்சுக்களிற் போலச் சபையை மகிழ்வித்து வசீகரிக்கப் பொருந்தாதன கூறுதலாகாது. கூறின், குளிக்க வந்தகேட்போர்கள் சேறு பூசிக்கொண்டவர்களாவர்கள்.
நான் கற்பித்த வித்தியாலயத்தின் சைவமன்ற மாணவர்கள் ஒருமுறை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசையிற் பேசுவதற்கு, பேச்சாளர் ஒருவரை அழைத்திருந்தனர். அவ்விழாவுக்கு நான் தலைமை வகித்தேன்.
பேச்சாளர் ‘பித்தா பிறைசூடி’ என்ற தேவாரத்துக்கு நயம்பட உரை கூறினார். அவர் அத்தேவாரத்தை, பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா, எத்தால், மறவாதே, நினைக்கின்றேன், மனத்துன்னை, வைத்தாய் பெண்ணை, தென்பால் வெண்ணெய்நல்லூரருட்டுறையுளத்தா, உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே எனப் பிரித்துக்கொண்டு ‘வைத்தாய் பெண்ணை’ என்பதற்கு, நீ உமாதேவியாரை இடப்பாகத்தில் வைத் திருக்கிறாய் என்று பொருள் கூறி, அப்படிப்பட்ட நீ, என்னை விவாகம்செய்யாது தடுக்கலாமா? தனக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியா? என்று நயமும் உரைத்தார். எனக்குத் திகைப்பாக இருந்தது.
ஒருவரைப் பேச அழைத்து அவரை எம்மிடத்தில் வைத்துக் கண்டிப்பது அழகன்று, கண்டியாது விடின் அக்கருத்தை நாமும்ஏற்றுக் கொண்டதாக முடியும்.
மாணவரும் பிழையாக விளங்கிக் கொள்வார்கள் என்பனவற்றை எண்ணி தலைவர்முடிவுரையிலே பின்வருமாறு சுருக்கமாகக்கூறினேன்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை, ‘பித்தா பிறை சூடி’ என்ற தேவாரத்தில் ஆறுமுறை அழைக்கின்றார்கள். அழைத்துஉனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே எனப் பணிந்துரைக்கின்றார் என்று கூறி, அத்தேவாரத்தை பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா, எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தா, உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே, எனப் பிரித்துக் காட்டி, அதில், பெண்ணை என்பதுஒரு நதியின் பெயர்; ‘ஐ’ உருபேற்ற பெண் எனுஞ் சொல்லன்று என விளக்கினேன்.
‘சிவனும் ஆன்மாக்களும் நித்திய வஸ்துக்கள்; சிவன் எப்பொழுதும் ஆண்டான்; ஆன்மாக்கள் எப்பொழுதும் அடிமைகள்மோட்சத்திற்கூட’ என்னுங் கருத்துக்கள், ‘உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே’ என்பதில் அடங்கியிருக்கின்றன.
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே.
‘சைவநீதி’ ஈசுர ஐப்பசி- கார்த்திகை 1997, பக்கம்- 2
பி.கு-
திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை ஆலயம்.
இவ்வாலயத் தீர்த்தமே தென் பெண்ணையாறு.
இங்கே தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்:
‘ உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே’ என்கின்றார்.
கருத்து:
உமக்கு முன்பே அடியவன் இனி இல்லையென்று கூறலாமோ!
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதன்மையான ‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டதேவர் ஞானம் பெற்ற திருத்தலம்என்பதும் சிறப்பே!